தமிழ்நாட்டில் காளையடக்கும் போட்டிகள் நடப்பதை தமிழக அரசு நிச்சயம் உறுதி செய்யும் என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
காளையடக்கும் போட்டிகளை நடாத்துமாறு மாநில மற்றும் மத்திய அரசுக்களை வலியுறுத்தி தமிழகத்தின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் இடம்பெற்று வரும் நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த கட்சியைச் சேர்ந்த துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ தவேவைச் இன்று சந்தித்துள்ளனர்.
இன்றைய இந்த சந்திப்பில் குறித்த இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ளதுடன் மனுக்களையும் கையளித்துள்ளனர் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழ்நாட்டில் காளையடக்கும் போட்டிகள் நடைபெற முடியாத நிலை ஏற்பட்டதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் அரசே காரணம் என்று தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டு முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், காளையடக்கும் போட்டிகளுக்கு எவ்வாறு மத்திய அரசுகளாலும் நீதிமன்றத்தாலும் தடை விதிக்கப்பட்டது என்பதை விரிவாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த இந்த விவகாரம் தொடர்பில் ஊடகவியளாலர்களுக்கு இன்று கருத்துத் தெரிவித்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் ஸ்டாலின், இந்த விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தை மீறி செயல்படும் மத்திய அரசு, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தைக் கைகாட்டுவதாகவும் அவர் சாடியுள்ளார்.