நல்லிணக்க ஆலோசனை செயலணியின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் அலட்சியப்படுத்துவதாக அனைத்துலக மன்னிப்புச்சபை குற்றஞச்சாடடியுள்ளது.
இலங்கையில் பல தசாப்தங்களாக இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்து அனைத்துலக சட்டத்தின்படி விசாரிக்குமாறு நல்லிணக்க ஆலோசனைக்கான செயலணி குழுவின் அறிக்கை வலியுறுத்துவதனை அது சுட்டிக்காட்டியுளள்து.
இவ்வாறான அனைத்துலக விசாரணையை இலங்கை அரசாங்கம் புறக்கணித்து வரும் வரை, இலங்கையில் உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போன குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உரிய நியாயம், உண்மை மற்றும் இழப்பீடு ஆகியவை கிடைப்பது எட்டாக்கனியாகத் தான் இருக்கும் என்றும் அனைத்துலக மன்னிப்புச்சபை இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
நல்லிணக்க வழிமுறைகள் ஆலோசனைக்கான செயலணியின் கண்டுபிடிப்புகள் அடங்கிய அறிக்கையை இலங்கை அரசாங்கம் மிகவும் எளிதாக அலட்சியப்படுத்தியது குறித்து அனைத்துலக மன்னிப்புச்சபை தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த சனவரி 3-ஆம் நாளன்று, பல முக்கிய பரிந்துரைகளை உள்ளடக்கி 700 பக்கங்களுக்கும் மேலான ஒரு விரிவான அறிக்கையை நல்லிணக்க வழிமுறைகள் ஆலோசனைக்கான செயலணி வெளியிட்டது.
எனினும் இந்த அறிக்கை கையளிப்பின் போது இலங்கை அதிபரோ அல்லது பிரதமரோ பங்கேற்கவில்லை என்பதுடன், இந்த அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த இலங்கையின் நீதியமைச்சர், இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளில் தனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்று தெரிவித்துள்ளதனையும் அனைத்துலக மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அனைத்துலக மன்னிப்புச்சபையின் தெற்காசிய இயக்குநர் சம்பா பட்டேல், இலங்கைப் பிரதமரால் நியமிக்கப்பட்ட செயலணியின் அறிக்கையை மிகவும் விரைவாக தாக்கல் செய்ய இலங்கை அரசு கேட்டுக் கொண்டதாகவும், சமுகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள 7000-க்கும் மேற்பட்ட இலங்கை மக்கள், குறிப்பாக மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட பலர் தைரியமாக தாங்களே முன் வந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பான தங்களின் கடும் பணியை சிரத்தையுடன் செயலிணியின் உறுப்பினர்கள் செய்து முடித்து விட்ட போதிலும், செயலணியின் அறிக்கை மற்றும் அவர்களின் கண்டுபிடிப்புகளை இலங்கை அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஏமாற்றத்தை அளிப்பதாகவும் அவர் அதிருப்பதி வெளியிட்டுள்ளார்.
தங்களின் குடும்ப உறுப்பினர் கொல்லப்பட்டதாலோ அல்லது காணாமல் போனதாலோ பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதற்கு இலங்கை அரசாங்கம் தனது உறுதியை காட்ட வேண்டுமென்றால், அவர்கள் இந்த அறிக்கையின் பரிந்துரைகள் குறித்து வலுவாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் சம்பா பட்டேல் மேலும் தெரிவித்துள்ளார்.