வடக்கு மாகாணத்தில் பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியில் இருந்து அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரேரணை நேற்று வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டது.குறித்த பிரேரணையை பதில் முதலைமைச்சர் பொ.ஐங்கரநேசன் சமர்ப்பித்து உரையாற்றுகையில், “வடக்கு மாகாணம் எதிர்கொள்ளும் சுற்றுசூழல் பிரச்சினைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் பிரதானமானதாக உள்ளது. குறிப்பாக பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குவளைகள், தட்டுக்கள், பெட்டிகள் போன்றன. இதனால் சுற்றுசூழல் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றது. இலங்கை அரசாங்கம் 20 மைக்றோன் அல்லது அதற்கு குறைவான அளவுள்ள பிளாஸ்டிக் உற்பத்தியையும், விற்பனையையும் 1980ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் படி 2007.01.01ஆம் திகதி முதல் தடை செய்திருக்கின்றது.
அந்த சட்டம் தென்னிலங்கையில் இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மீறுவோர் மீது பாரியளவு பணம் தண்டம் விதிக்கப்படுவதுடன், 2 வருடத்திற்கு குறையாத சிறை தண்டனையும் விதிக்கப்படுகின்றது. ஆனால், வடக்கு மாகாணத்தில் இந்த தடை நடைமுறை படுத்தப்படவில்லை. இந்நிலையில் மேற்படி தடை எதிர்வரும் 22.04.2017ம் திகதி தொடக்கம் வடக்கில் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது” என அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.