இலங்கையின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகாரங்களை வழங்குவது குறித்து போசுவதற்கு தற்போதைய சூழல் உகந்ததாக இல்லை என்று சிறிலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
கண்டிக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை நாடாளுமன்றின் பிரதி சபாநாயகரும், நாடாளுமன்ற குழுக்களின் தவிசாளருமான திலங்க சுமந்திபால, இன்றைய நாள் மகாநாயக்க தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சனாதிபதியொருவர் இருப்பார் என்றே தாம் நினைப்பதாகவும், அதுவே கட்சியின் விருப்பம் எனவும், மாகாண ஆளுநர்களின் நியமனம் தொடர்பான விடயங்கள், அதேபோன்று 13 ஆவது திருத்தத்தில் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகாரங்களை ஏற்படுத்துவது, அல்லது அதனை வழங்குவது தொடர்பில் கதைப்பதற்கோ பேச்சுவார்த்தை நடாத்துவதற்கோ, தற்போதுள்ள சூழல் பொருத்தமானது இல்லை என்பதே தமது எண்ணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் போசுவதற்கு சிறிலங்கா சுதந்திர கட்சி தற்போது தயாராக இல்லை என்பதையும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார சனாதிபதி ஒருவர் தற்போது பதவியில் இருக்கும் நிலையில், அந்த சனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, சனாதிபதியொருவர் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்றே கருத்திலேயே சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்ளதாகவும், சிங்கள பௌத்தம் என்ற யோசனை, சிங்கள பௌத்தர்களுக்கான முன்னுரிமை, புத்த தருமத்தை வளர்த்தல் – ஊக்குவித்தல் தொடர்பில் தற்போதுள்ள அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள, புத்த தருமம் தொடர்பான – பௌத்ததிற்கான முன்னுரிமை தொடர்பான எந்த வொரு சொற்களிலும் மாற்றம் செய்யப்படக் கூடாது என்ற கருத்திலேயே தாம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக போர் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில், அந்த போர் ஏற்படுவதற்கு காரணமொன்று இருந்திருக்க வேண்டும் எனவும், தமக்கு உயிர் வேண்டாம் என்று மரணிக்க துணிந்த ஒரு பிரிவினர் நாட்டில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒரு போர் ஏற்படாதவாறு மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும், தமது மதம் மற்றும் இனத்தின் மீது அன்பு கொண்டிருந்தால் மீண்டும் போர் ஏற்படாத வகையில், சிறு சிறு பிரிவினருக்கு, குழுக்களுக்கு குறைந்த வசதி வாய்ப்புக்கள் வழங்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.