கிப்து நாட்டின் சார்கா நகரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அல்-நாக்ப் பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடி உள்ளது. இங்கு நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். போலீசார் சுதாரித்து பதில் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து இரு தரப்பினருக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. போலீசாரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தீவிரவாதிகள் பின்வாங்கினர்.
இந்த சண்டையில் காவல்துறை தரப்பில் 8 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். போலீசாரின் பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதுகாப்புபடையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
எகிப்தில் முன்னாள் அதிபர் மோர்சி, கடந்த 2013ம் ஆண்டு பதவியிறக்கம் செய்யப்பட்டதையடுத்து போலீஸ் மற்றும் ராணுவத்தை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.