G7 நாடுகள் மத்தியில் 2017-2018ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சியில் கனடா இரண்டாவது இடத்தினை பெற்றுக் கொள்ளும் என்று IMF எனப்படும் அனைத்துலக நாணய நிதியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ள அனைத்துலக நாணய நிதியம், கடந்த ஆண்டினைக் காட்டிலும் 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் கனடாவின் பொருளாதார வளர்சசி பலமானதாக இருக்கும் என்று எதிர்வு கூறியுள்ளது.
எனினும் டொனால்ட் ட்ரப்பின் பதவி ஏற்பின் பின்னர் அனைத்துலக அளவிலான பொருளாதார மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்ற வகையில், அது குறித்த கணிப்பீடுகளை எதிர்வரும் நாட்களிலேயே மேற்கொள்ள முடியும் எனவும் அது குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து நேற்று வோசிங்டனில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அனைத்துலக நாணய நிதியத்தின் ஆய்வுப் பிரிவு இயக்குநர், அமெரிக்க பொருளாதாரத்தில் ட்ரம்பின் கொள்கைகள் எவ்வாறான தாக்த்தினை ஏற்படுத்தும் என்பதனை தற்போதைக்கு கூறமுடியாது என்ற போதிலும், அதனால் கணிசமான தாக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கனடாவின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் 1.3 சதவீதத்தினால் அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆண்டில் அது 1.9 சதவீதமாகவும், 2018இல் அது இரண்டு சதவீதமாகவும் அதிகரிக்க கூடும் எனவும் அனைத்துலக நாணய நிதியம் கணிப்பீடு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
G7 நாடுகள் மத்தியில் அமெரிக்காவே எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் திகழும் எனவும், இந்த ஆண்டில் 2.3 சதவீதமாகவும், 2018ஆம் ஆண்டில் 2.5 சதவீதமாகவும் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி இருக்கும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பமான எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டு, தற்போது மீட்சி பெற்றுவரும் கனடா, G7 நாடுகள் மத்தியில் வேகமாக பொருளாதார வளர்ச்சியினைக் காணும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தினை வகிக்கும் எனவும் அது தெரிவித்துள்ளது.