27 பிரகடனங்களையும் நடைமுறைப்படுத்தினாலேயே இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த வரிச் சலுகைத் திட்டத்தை மீளவும் வழங்குவதற்கு 27 அனைத்துலக பிரகடனங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டுமென இன்றைய நாள் மீளவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கொழும்பு அலுவலகம் இது குறித்த அறிவித்தலை விடுத்துள்ளது.
அனைத்துலக மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றாடல் காரணிகள் மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்த பிரகடனங்களை இலங்கை நிறைவேற்ற வேண்டுமென அது தெரிவித்துள்ளது.
இந்த பிரகடனங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக இலங்கை அரசாங்கம் உறுதிமொழி வழங்கி அதனை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமானது என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
வரலாற்று ரீதியாக நீண்ட காலம் நீடித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தற்போதைய அரசாங்கம் எடுத்து வரும் முனைப்புக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளித்து வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.
போர் காரணமாக அனைத்து சமூகத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரினதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அந்த அறிவித்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளப் பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள செயற்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு நிபந்தனைகளை இல்ஙகை சனாதிபதி முற்றாக நிராகரித்து்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 6.1.1 மற்றும் 6.1.8 ஆகிய இரண்டு பரிந்துரைகளுக்கும் எவ்வாறானதொரு சூழ்நிலையிலும் இணங்க முடியாதென உறுதியாக மறுப்புத் தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன, அவற்றை செயற்திட்டத்திலிருந்து நீக்கிவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு முன்வைக்கப்பட்டுள்ள செயற்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய பரிந்துரைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் சிறப்புக் குழுவொன்றையும் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதாக தெரியவருகிறது.
செயற்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் நேற்று- இலங்கையின் நிலைப்பாட்டினை அறிவிக்குமாறு ஜரோப்பிய ஒன்றியம் கோரியிருந்த போதிலும், இலங்கை இன்னமும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இல்ஙகை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த குழுவின் இறுதி முடிவுக்கமைய, இணங்கக்கூடியவை மற்றும் இணங்கமுடியாதவை குறித்து ஜரோப்பிய ஒன்றியத்துக்கு தெளிவாக எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.