மீண்டும் ஒரு கொடிய போர் ஏற்பட கூடாதெனில், மக்கள் பெருமையடையும் வகையில் புதிய அரசியல் சாசனத்தை அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், நல்லிணக்கத்தினை நோக்கி அனைவரும் பயணித்துக்கொண்டு இருப்பதாகவும், இந்த நிலை தொடர வேண்டும் என்றால் அனைவரும் இலங்கையர் என்ற நிலையில், அனைத்து மக்களும் செயற்பட்டு, அனைவருக்கும் சாதகமான அரசியல் சாசனத்தினை கொண்டுவர அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் நல்லிணக்கம் அவசியம் எனில் புதிய அரசியல் சாசனம் ஒன்று தேவைப்படுவதாகவும், கடந்த காலத்தில் ஏற்பட்ட கொடிய போர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு வன்முறையோ, கெடுதிகளோ நாட்டில் இனி வரும் காலங்களில் ஏற்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு போர் ஒன்று ஏற்படுவதை யாரும் விரும்பவும் மாட்டார்கள் எனவும், அந்த கொடிய போர் நிலைமை ஏற்பட என்ன காரணம் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு மீண்டும் ஏற்படக்கூடாது எனில்? தற்போது அமைக்கப்படவுள்ள அரசியல் சாசனம் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலும், பெருமையடையும் விதத்திலும் அமையவேண்டும் எனவும், இதற்காக அனைத்து மக்களும் ஒன்றாக செயற்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வகையில் சாசனம் அமையப்பெற்றால், நாட்டினை பிரிக்கும் அல்லது பிளவடைய செய்யும் நிலைமை ஏற்படாது, அதற்கான முழு முயற்சிகளையும் ஒத்துழைப்பினையும் தாங்கள் வழங்கியுள்ளதாகவும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.