லிபரல் அரசாங்கத்தின் மத்திய அமைச்சர்களின் மூன்றுநாள் ஒன்றுகூடல் நிகழ்வொன்று இன்று கல்கரியில் ஆரம்பமாகியுள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், அந்த அதிகார மாற்றத்தினால் அயல்நாடான கனடா எதிர்கொள்ளக்கூடிய விடயங்கள் குறித்து இந்த ஒன்றுகூடலின் போது ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஒன்றுகூடலின் போது டொனால்ட் ட்ரம்ப்பின் ஆலோசகருடனும் சிறப்புக் கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
வரலாற்று ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் அமெரிக்காவுடன் தொடர்ச்சியான தொடர்புகளைக் கொண்டுள்ள கனடா, புதிய லிபரல் ஆட்சியிலும் சூமூகமான உறவுகளை அமெரிக்காவுடன் பேணி வந்த நிலையில், தற்போது அமெரிக்க தலைமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம் கனடாவிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வோசிங்டனில் அனைத்து வகையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் நிலையில், அதற்கோற்றவாறான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தேவை பிரதமர் ஜஸ்டின் ரூடோ தலைமையிலா கனேடிய அரசாங்கத்திற்கும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே இன்றிலிருந்து எதிர்வரும் சில நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த அமைச்சரவை ஒன்றுகூடலின் போது, அமெரிக்க ஆட்சி மாற்றத்தினை எதிர்கொள்வது குறித்த விடயங்கள் முக்கியத்துவம் பெறும் என்று கூறப்படுகிறது.
இதேவேளை இன்று கல்கரியில் வைத்து கருத்து வெளியிட்டுள்ள கனேடிய இயற்கை வள அமைச்சர், கனடாவுக்கும் அமெரிக்காவுக்கம் இடையே பகிரப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் இருப்பதான தகவலை கனேடிய அரசாங்கம் அமெரிக்காவின் புதிய நிர்வாகத்திற்கு அறிவிக்கும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அமெரிக்காவின் புதிய நிர்வாகம் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது என்பதனை பொறுத்திருந்தே பார்க்கவேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பல்வேறு விடயங்கள் பேச்சளவில் கூறப்பட்டுள்ளதுடன், மேலும் பல விடயங்கள் அனுமானங்களாக வெளியிடப்பட்டு வருகின்ற போதிலும், நடைமுறையில் எவ்வாறான விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதே முக்கியமானது எனவும், குறிப்பாக சக்தி வள விடயங்களில் இரண்டு நாடுகளுக்கும் இடையே ஒன்றிணைந்த செயற்திட்டங்கள் பல காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு தொடர்பில் கனேடிய பிரதமருடனும், மெக்சிக்கோ அதிபருடனும் பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளதாக இன்று காலையில் டொனால்ட் ட்ரம்ப தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.