சீட்டா(CETA) எனப்படும் கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஐரோப்பிய நகரங்கள் பலவற்றிலும் எதிர்ப்பு பேரணிகள் நடாத்தப்பட்டுள்ளன.
குறித்த அந்த ஒப்பந்தம் இன்னமும் அங்கீகரிக்கப்படவி்ல்லை என்ற போதிலும், அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருமானால் ஐரோப்பாவில் பலரும் வேலை இழக்கும் நிலை ஏற்படும் என்றும், பாதுகாப்பு நியமங்கள் குறைவடையும் எனவும், ஐரோப்பிய மக்களுக்கு மேலும் பல பாதிப்புக்கள் ஏற்படும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று பேர்ளின், டப்ளின், பாரிஸ், மாட்ரிட், ஸ்பெய்ன், போர்த்துக்கல், புருசெல்ஸ் உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் இடம்பெற்ற இவ்வாறான பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து செகாண்டதாக கூறப்படுகிறது.
சுமார் 130 உழவு இயந்திரங்களுடன் யேர்மனியின் பேர்ளின் வீதிகளில் அணிவகுத்துச் சென்ற 18,000 ற்றும் அதிகமான ஆர்ப்பாட்டக் காரர்கள், குறித்த இந்த ஒப்பந்தத்துக்கு எதிரான மனு ஒன்றினை யோர்மனியின் வேளான்துறை அமைச்சகத்திடம் கையளித்துள்ளதாக கூறப்படுகிறது.
யேர்மனியின் பசுமைக் கட்சியினாலும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களாலும், விவசாயிகளாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் கலந்கோண்டோர், சீட்டா ஒப்பந்தத்தை மட்டும் சாடாது வேறு பல முறைப்பாடுகளையும் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளனர்.
சீட்டா போன்ற ஒப்பந்தங்களால் உள்ளூர் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சட்ட உரிமைகள் ஐரோப்பிய அரசாங்கங்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும் எனவும் போராட்டக் காரர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களான பல்தேசிய நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மேலதிக சட்ட பாதுகாப்புகளைக் கொண்டு, அவர்களுக்க இழப்புக்கள் அல்லது வருமான குறைவுகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில், அவை தமது அரசாங்கங்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கான உரிமை உள்ளதனையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அது மட்டுமின்றி குறித்த இந்த உடன்பாடு தொடர்பிலான பேச்சுக்கள மூடிய அறைக்குள்ளேயே மேற்கொள்ளப்பட்டு வருவதனால், பாதுகாப்பு குறித்த கரிசனைகளும் தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே குறித்த இந்த ஒப்பந்தம் அங்கீகரிக்ப்படுவதற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் நாடாளுடன்றில் அவை விவாதிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும் குறித்த இந்த ஒப்பந்தத்தினை ஆதரிப்போர், இந்த ஒப்பந்தம் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கனடாவுக்கும் 20 சதவீத பொருளாதார அதிகரிப்பு ஏற்படும் எனவும், ஆண்டுதோறும் கனடாவுக்கு 8.4 பில்லியன் யூரோ வருமானமும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 12 பில்லியன் யூரோ வருமானமும் ஏற்படும் எனவும் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.