TPP எனப்படும் பசுபிக் பிராந்திய வலய கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது, கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
பசுபிக் பிராந்திய உடன்பாட்டில் இருநு்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வதாக வாக்குறுதி வழங்கிவந்த அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அதனை நடைமுறைப்படுத்துவற்கான சமிக்ஞையை வெளியிட்டுள்ளதனை அடுத்து, கனடாவின் வர்த்தகம் குறித்த இந்த அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.
12 நாடுகளை உள்ளக்கிய பசுபிக் பிராந்திய ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், இது அமெரிக்க பணியாளர்களுக்கு மிகவும் சாதகமான முடிவு என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும் அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தினை எதிர்கொள்வது உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் கல்கரியில் ஒன்றுகூடி ஆராய்ந்துவரும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தலைமையிலான கனேடிய அமைச்சரவை, இதுவரை இதுகுறித்து எந்தவொரு கருத்தினையும் வெளியிடவில்லை.
இவ்வாறான நிலையிலேயே அமெரிக்காவின் இவ்வாறான நகர்வுகள் கனடாவுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக் கூடும் என்ற கருத்துகளை பொருளியல் நிபுணர்கள் வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக கனடா தொடர்புடைய, கனடாவுக்கு தேவையான சில வர்த்தக உடன்படிக்கைகளை அமெரிக்காவின் பங்குபற்றுதல் இன்றி நடைமுறைப்படுத்து கடினம் என்பதனை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்கா இல்லாவிடினும் பசுபிக பிராந்திய ஒப்பந்தத்தை நடைமுறைச் சாத்தியமாக்க முடியும் என்று யப்பான் கூறிவருகின்ற போதிலும், அமெரிக்கா இல்லாது கனடாவால் அதனுள் பிரவேசிப்பது கடினமே என்று வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் கனடா அவதானம் செலுத்த வேண்டியுள்ளதனையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் அமெரிக்காவின் புதிய நிர்வாகம் எதிர்மறையான முடிவுகளை மேற்கொள்ளுமாயின், அது கனடாவுக்கு மேலும் பாகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
எனினும் குறித்த இந்த உடன்படிக்கை தொடர்பில் தான் கனடா மற்றும மெக்சிக்கோ நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.