தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் புதிய பதில் பிரதி ராஜாங்க செயலாளர் அஞ்செலா அக்லெர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ள அவர், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளதோடு, இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து அமெரிக்காவின் புதிய சனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார்.
அமெரிக்காவின் ஆட்சிப் பொறுப்பை ட்ரம்ப் கையேற்றதும், முன்னாள் சனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ் செயற்பட்ட வெளிநாடுகளுக்கான தூதுவர்கள் உள்ளிட்ட ராஜதந்திரிகளை பதவி விலகுமாறு கோரியிருந்தார்.
இந்த நிலையில் இதுவரை காலமும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி ராஜாங்க செயலாளராக பதவி வகித்து வந்த நிஷா பிஷ்வால் பதவி விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக அஞ்செலா அக்லெர் பதில் பிரதி ராஜாங்க செயலாளராக பணியாற்றி வருகிறார்.
இலங்கை விவகாரத்தில் காத்திரமான பங்கை வகித்த முன்னாள் பிரதி ராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால், குறிப்பாக ஜெனீவா தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் ட்ரம்ப் அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கை முற்றிலும் மாறுபட்டதாக காணப்படுமென தெரிவிக்கப்படும் நிலையில், அமெரிக்காவின் புதிய நிர்வாகம் இலங்கை விவகாரத்தில் எவ்வாறான போக்கை கடைப்பிடிக்குமென்ற எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது.