ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் ஸ்பெயினின் நடால், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோரும், மகளிர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், குரோஷியாவின் மிர்ஜானா லூசிக் பரோனி ஆகியோரும் அரை இறுதிக்கு முன்னேறினர். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி அரை இறுதியில் நுழைந்தது.
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 3-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிச், 9-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடாலுடன் மோதினார்.
இதில் நடால் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். 2-வது செட்டில் ரயோனிச் கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் இந்த செட் 6-6 என சமநிலை எட்டியது. இதையடுத்து டை பிரேக்கர் மூலம் இந்த செட்டை நடால் 9-7 என தனதாக்கினார்.
3-வது செட்டில் தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்திய நடால் 6-4 என கைப்பற்றினார். முடிவில் 2 மணி நேரம் 44 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தில் 6-4, 7(9)-,6(7), 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்ற நடால் அரை இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு கால் இறுதியில் 11-ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கோபின், 15-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொண்டார். சுமார் 2 மணி நேரம் 13 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டிமிட்ரோவ் 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றிப் பெற்று அரை இறுதியில் கால் பதித்தார்.
ஆஸ்திரேலிய ஓபனில் டிமிட்ரோவ் அரை இறுதிக்கு முன்னேறுவது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2014-ல் கால் இறுதி வரை முன்னேற்றம் கண்டிருந்தார். ஒட்டுமொத்தமாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் டிமிட்ரோவ் அரை இறுதியில் நுழைவது இது 2-வது முறை. 2014-ல் நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் அவர் அரை இறுதி வரை சென்றிருந்தார். அரை இறுதியில் நடால் – மிடிட்ரோவ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
மகளிர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 9-ம் நிலை வீராங்கனையான ஜோகன்னா ஹொன்டாவுடன் மோதினார். ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செரீனா 6-2, 6-3 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
அரை இறுதியில் செரீனா, குரோஷியா வின் மிர்ஜானா லூசிக் பரோனியை எதிர்கொள்கிறார். தரவரிசையில் 79-வது இடத்தில் உள்ள மிர்ஜானா தனது, கால் இறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங் கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவுடன் மோதினார். 1 மணி நேரம் 47 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மிர்ஜானா 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்றார்.
ஆஸ்திரேலிய ஓபனில் 9-வது முறையாக விளையாடும் மிர்ஜானா தற்போதுதான் முதன்முறையாக அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில் 7 முறை முதல் சுற்றுடனும், ஒருமுறை 2-வது சுற்றையும் மட்டுமே சந்தித்த அவர், இம்முறை பலம்வாய்ந்த செரீனாவுடன் பலப்ரீட்சை நடத்த உள்ளார்.
சானியா ஜோடி அசத்தல்
கலப்பு இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி 6-4, 3-6,12-10 என்ற செட் கணக்கில் கனடாவின் கபேரியலா டப்ரோவ்ஸ்கி, இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.
ஜூனியர் மகளிர் பிரிவில் இந்தியாவின் ஜீல் தேசாய் கால் இறுதிக்கு முன்னேறி னார். அவர் தனது 3-வது சுற்று ஆட்டத் தில் 5-ம் நிலை வீராங்கனையான செர்பியா வின் ஒல்கா டேனிலோவிச்சை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட்டில் ஒல்கா 5-3 என முன்னிலை வகித்த போது காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் ஜீல் தேசாய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஜூனியர் ஆடவர் பிரிவு இரட்டையர் கால் இறுதியில் இந்தியாவின் சித்தாந்த் பான்தியா, துருக்கியின் கயா கோரே ஜோடி 2-6, 5-7 என்ற செட் கணக்கில் நியூஸிலாந்தின் பின் ரெனால்ட்ஸ், போலந்தின் டுஆர்டி வாலே ஜோடி யிடம் தோல்வியடைந்தது.
Keywords: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ், அரை இறுதி, செரீனா, ரபேல் நடால், சானியா, இவான் டுடிக் ஜோடி, அசத்தல்