அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த 20-ந் தேதி பதவி ஏற்ற நாள் முதல் டொனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உள்நாட்டுப்போரில் கடுமையாக பாதிக்கப்பட்ட சிரியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்கு வர காலவரையற்ற தடை விதித்துள்ளார். மேலும், ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
அதிபர் டிரம்ப்பின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடு முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெறுகின்றன. மேலும், டிரம்ப் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றங்கள் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளன.
இந்நிலையில் அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் சாலி யேட்ஸ், நீதித்துறை வழக்கறிஞர்களுக்கு எழுதிய கடிதத்தில், டிரம்பின் முடிவை ஏற்க முடியாது, இதற்காக வாதாடக் கூடாது எனக் கூறியிருந்தார். இதனையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
மேலும், ஒபாமா நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட சாலி யேட்ஸ், டிரம்ப் உத்தரவுக்கு எதிரான சட்ட ரீதியிலான சவால்களை எதிர்க்க முடியாது என்று அறிவித்து நீதித்துறைக்கு அவர் துரோகம் இழைத்துவிட்டதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அவருக்கு பதில், டானா போன்டே என்பவர் அட்டர்னி ஜெனரலாக (பொறுப்பு) நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அட்டர்னி ஜெனரலை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதி செய்யும் வரை இவர் பதவி வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அட்டர்னி ஜெனரல் பதவிக்கு ஜெப் செசன்ஸ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.