தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாகின்றார்கள் என்று முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவிப்பதானது வெறும் கட்டு கதை எனவும், தமது சொந்த நலனுக்காக தமிழ் மக்களை பகடைக்காய்களாக மகிந்த ராஜபக்ச பயன்படுத்துவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாவதாக அநுராதபுரத்தில் வைத்து மகிந்த ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள சுரேஷ் பிரேமசந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக முன்னாள் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தப் போவதாக தெரிவிக்கப்பட்டமைகூட கற்பனையே என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்ததாக தெரிவித்து தொடர்ந்தும் சிங்கள மக்கள் மத்தியில் தன்னை ஒரு நாயகனாக காட்டிக்கொள்ளவே விடுதலைப் புலிகள் மீள உருவாவதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது முற்றிலும் கட்டுக்கதையே எனவும், தன்னுடைய அரசியல் பலத்தை அதிகரித்துக்கொள்ளும் நோக்கிலேயே மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக கஞ்சா வைத்திருந்ததாகவும், கண்ணிவெடி வைத்திருந்ததாகவும் தெரிவித்தே குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு உண்மையாக சுமந்திரனைக் கொல்லச் திட்டம் தீட்டப்பட்டிருந்தால், ஏன் அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனவும், இராணுவத் தளபதியும் அவ்வாறு ஏதும் இடம்பெற்றிருக்கவில்லை என்றே கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது சொந்த நலனுக்காக தமிழ் மக்களை பகடைக்காய்களாக மகிந்த ராஜபக்ச பயன்படுத்துகின்றார் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.