கறுப்பு மேக்கப்புடன் விஜயகுமாரி நடித்த “நானும் ஒரு பெண்”, மகத்தான வெற்றி பெற்றதுடன் ஜனாதிபதி விருதையும் பெற்றது.
அண்மையில் வெளியான “சிவாஜி” படத்தில், சிகப்பான இரு பெண்கள் கறுப்பு `மேக்கப்’பில் அங்கவை, சங்கவை என்ற வேடங்களில் நடித்திருக்கிறார்கள் அல்லவா?
1963-ம் ஆண்டிலேயே, ஏவி.எம். தயாரித்த “நானும் ஒரு பெண்” படத்தில் கதாநாயகியாக நடித்த விஜயகுமாரி, படம் முழுக்க கறுப்பு மேக்கப்பில் நடித்து, சிறந்த நடிகை என்று புகழ் பெற்றார்.
படம் தயாராகிக் கொண்டிருந்தபோது, `இப்படி கறுப்பு நிறத்தில் நடித்தால், ரசிகர்கள் விரும்பமாட்டார்கள். இதுவரை கஷ்டப்பட்டு சம்பாதித்த பேரும், புகழும் பறிபோய்விடும்’ என்று பலரும் பயமுறுத்தினார்கள். விஜயகுமாரிக்கும் அச்சம் ஏற்பட்டது.
இதையெல்லாம் மீறி அவர் கறுப்புப் பெண்ணாக நடித்தது எப்படி?
அதில் சுவையான கதையே அடங்கியிருக்கிறது. அதுபற்றி விஜயகுமாரியே கூறுகிறார்:-
“நானும் ஒரு பெண் படப்பிடிப்பு தொடங்கிய வேளையில், “வசந்தி” படத்தின் பூஜை, சாரதா ஸ்டூடியோவில் நடந்தது. இது ஏ.எல்.எஸ். தயாரிப்பு. நானும் அந்தப் படத்தில் நடித்ததால், பூஜைக்குச் செல்லத் தீர்மானித்தேன். “நானும் ஒரு பெண்” படத்துக்காகப் போட்ட கறுப்பு `மேக்கப்’புடன் சென்றேன்.
என்னைப் பார்த்தவர்கள் எல்லோரும், “நடிகைகளை அழகாகப் பார்க்கத்தான் ரசிகர்கள் விரும்புவார்கள். நீ இந்த கறுப்பு மேக்கப்பில் நடித்து உன் பெயரையே கெடுத்துக் கொள்ளப் போகிறாய்!” என்று சொன்னார்கள்.
கறுப்பு நிறத்துடன் நடிப்பதை, நான் தவறாக நினைக்கவில்லை. ஆனால், எல்லோரும் சேர்ந்து பயமுறுத்தியதால் எனக்கும் அச்சம் ஏற்பட்டது. `எதிர்காலம் பாதிக்கப்படுமோ!’ என்று பயந்தேன்.
நான் மனக்கலக்கத்துடன் நின்று கொண்டிருந்தபோது, சிவாஜிகணேசன் அங்கே வந்தார்.
“இந்த மேக்கப் எந்தப் படத்துக்கு?” என்று கேட்டார். “ஏவி.எம். தயாரிக்கும் நானும் ஒரு பெண் படத்தில் இப்படி நடிக்கிறேன்” என்று சொன்னேன்.
உடனே சிவாஜி, “விஜி! உன்னைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது. நான் பெண்ணாக இருந்திருந்தால் ஏவி.எம். செட்டியார் அவர்களிடம் போய், இந்த வேடத்தில் நான் நடிக்கிறேன். எனக்குக் கொடுங்கள் என்று கேட்டிருப்பேன்” என்றார். அத்துடன், “விஜி, இந்த கறுப்பு வேடம் உனக்கு பெரிய புகழை கொடுக்கப்போகிறது. மற்றவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு மனதை குழப்பிக்கொள்ளாமல் தைரியமாக நடி!” என்று வாழ்த்தினார்.
அவர் வாழ்த்தியது போலவே “நானும் ஒரு பெண்” மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதோடு மட்டுமல்லாமல், சிறந்த படத்துக்கான மத்திய அரசின் விருதையும், (வெள்ளிப்பதக்கம்) பெற்றது.
இதில் எஸ்.எஸ்.ஆருக்கு ஜோடியாக நான் நடித்திருந்தேன். எஸ்.வி.ரங்காராவ், ஏவி.எம்.ராஜன், புஷ்பலதா ஆகியோரும் நடித்திருந்தார்கள். திருலோகசந்தர் டைரக்டு செய்திருந்தார்.
இந்தப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு பெண்களிடம் இருந்தும், ரசிகர்களிடம் இருந்தும் பாராட்டி ஏராளமான கடிதங்கள் வந்தன.
அதில் ஒரு கடிதத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. அந்த கடிதம் ஒரு பெண் ரசிகை எழுதியது. அதில், “நான் கறுப்பாக இருக்கிறேன் என்பதால் என் கணவர் என்னை வெறுத்தார். கல்யாணம் ஆகியும், கன்னியாகவே வைத்திருந்தார். இந்நிலையில், நீங்கள் நடித்திருந்த “நானும் ஒரு பெண்” படத்தை அவர் பார்த்துவிட்டு வந்தார். அதன்பின் அவர் மனம் மாறி என் மீது அன்பு காட்டினார். எங்கள் வாழ்வும் மலர்ந்தது. நாங்கள் இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். இதற்கு காரணம் “நானும் ஒரு பெண்” படத்தில் நீங்கள் கறுப்பாக நடித்ததுதான்!” என்று எழுதி, அதில் “நன்றி” என்பதை அவருடைய ரத்தத்தில் எழுதி இருந்தார்.
ஒரு பெண் வாழ்க்கை மலர்வதற்கு நான் காரணமாக இருந்தேன் என்பதை நினைக்கும்போது, அந்த சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
“நானும் ஒரு பெண்” படத்திற்கான விருதை வாங்க டெல்லிக்கு சென்றோம். அங்கு அப்போது ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கையில் பரிசைப் பெற்றேன்.
அடுத்த நாள் நானும் என் கணவரும் பாராளுமன்றத்திற்குச் சென்றோம். அப்போது அங்கு நேருவை பார்த்தோம். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், என் கணவர் தி.மு.கழகத்தில் எம்.எல்.ஏ.வாக இருந்தும் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். எல்லோரும் எங்கள் குடும்ப நண்பர்களாக இருந்தும் இன்று வரை தமிழ்நாடு சட்டசபைக்கு நான் சென்றதில்லை. டி.வி.”யில்தான் சட்டசபை எப்படி நடக்கிறது என்று பார்த்திருக்கிறேனே தவிர, ஒருநாளும் நேரில் பார்த்ததில்லை!
அடுத்து, நான் நடித்த படம் பீம்சிங் டைரக்ட் செய்த “பார் மகளே பார்.” இந்தப்படத்தில், சிவாஜிகணேசன், சவுகார் ஜானகி எம்.ஆர்.ராதா, வி.கே.ராமசாமி, ஏவி.எம்.ராஜன், புஷ்பலதா, முத்துராமன் நான் எல்லோரும் நடித்தோம். இதில் முத்துராமன், ஜோடியாக நான் நடித்தேன். இதுவும் ஒரு வெற்றிப்படம்.
ஏவி.எம். தயாரித்த “காக்கும் கரங்கள்” படத்தில் நானும், என் கணவரும் நடித்தோம். இதன் டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர். இந்தப் படத்தில்தான் சிவகுமார், முதன் முதலாக திரை உலகிற்கு அறிமுகமானார். இதுவும் வெற்றிப்படம்தான்.”
– இவ்வாறு கூறினார் விஜயகுமாரி.