முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்கள் தொடர்ந்து 8ஆவது நாளாக இன்று முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்துள்ளனர்.
பல இளைஞர்களை திரட்டிக்கொண்டு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், ஆசிரியர் சங்கமும் இன்றைய தினம் கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து தமது பூரண ஆதரவை தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
விமானப்படையினர் வசமுள்ள தமது சொந்த நிலத்தை விடுவிக்கவேண்டுமென கோரி விமானப்படை முகாமின் முன்பாக சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என கடந்த மாதம் 31ஆம் திகதி முதல் இன்றுவரை எட்டாவது நாளாக குறித்த போராட்டம் தொடர்கின்றது.
முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்களுக்கு இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் ஐந்தாம் நாளாகவும் போராட்டம் நடைபெறுகின்றது.
இந்த நிலையில், யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் பவன், மாணவர் ஒன்றிய தலைவர் அனுஜன், யாழ். பல்கலைக்கழக கலைப்பீட ஒன்றியத்தலைவர் ரஜீவன் தலைமையில் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் வருகைத்தந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
தொடர்ந்து இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டுமென தெரிவித்து மகஜர் ஒன்றினையும் மக்களிடம் வாசித்து காட்டியுள்ளனர்.