யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்,’ என்றார் பாரதியார்.இத்தகைய சிறந்த மொழி, பண்பாடு, நாகரிகம் பெற்றவர்கள் தமிழர்கள். தமிழ் மொழியின் தன்மையும், சிறப்பையும் உலகறிய செய்த தமிழறிஞர்களால் மிகவும் பாராட்டுதலுக்கும், பெருமைக்கும் உரியவர், ‘மொழி ஞாயிறு’ என அழைக்கப்படும் நற்றமிழர் தேவநேயபாவாணர்.
இவர், 1902, பிப்.,7ல்திருநெல்வேலி மாவட்டம் சங்கரநயினார் கோவில் ஞானமுத்தன் – பரிபூரணம் தம்பதிக்கு 10வது குழந்தையாகப் பிறந்தார். சில ஆண்டுகளில் பெற்றோரை இழந்து, கொடிய வறுமை மட்டுமல்ல பல இன்னல்களுக்கும் ஆளானார். உறவினர் ஒருவரால் வளர்க்கப்பட்டார்.அன்றைய வடஆற்காடு மாவட்டம் ஆம்பூர் மற்றும் திருநெல்வேலியில் பள்ளி படிப்பு முடித்தார்.
1921ல் ஆசிரியர் பணிக்கு செல்ல விரும்பியபோது, அவருக்கு ஆசிரியர் பண்டிதர் மாசிலாமணி என்பவர் ஒருசான்றிதழ் வழங்கினார். அதில் பாவாணரின் பெயரை ‘தேவநேச கவிவாணன்’ என குறிப்பிட்டார்.பின் அப்பெயரையே, தம் பெயராக்கி கொண்டார். தான் படித்த ஆம்பூர் நடுநிலை பள்ளியிலேயே, தமிழாசிரியராக பணியில் சேர்ந்தார். 1924ல் மதுரை தமிழ்ச்சங்கப் பண்டிதத் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். ‘நேசன்’ என்பதும் ‘கவி’ என்பதும் வடமொழி சொற்கள் என்பதை அறிந்து, தமிழில் ‘தேவநேயபாவாணர்’ என அழைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் 1926ல் தென்னிந்திய தமிழ்ச் சங்கம்நடத்திய தமிழ்ப் புலவர் தேர்வு எழுதி வெற்றி பெற்று, பின் பி.ஓ.எல்., தேர்வும், சென்னை பல்கலையில் எம்.ஓ.எல்., பட்டமும் பெறுவதற்கு, திராவிட மரபுதோன்றிய இடம் குமரி நாடே எனும் பொருள் குறித்து, நுால் எழுதி பல்கலையில் சமர்ப்பித்தார். இந்நுாலை பல்கலை ஏற்கவில்லை. முகவை, தஞ்சை, சேலம் என பல மாவட்டங்களில் அவரது ஆசிரியர் பணி தொடர்ந்தது.
உறவு பெண் நேயமணியை 1930ல் திருமணம் செய்தார். இவருக்கு ஆறு குழந்தைகள். அன்பும் பண்பும் ஒருங்கே விளங்கப் பெற்ற இவர், தமிழ் தொடர்பான போராட்டங்களுக்கு பெருந்துணை யாய் நின்றார்.தமிழ் உட்பட 23 மொழிகளை கற்று அவற்றின் இலக்கிய இலக்கண அறிவையும் பெற்றவர் பாவாணர். ‘சொல்லாராய்ச்சி துறையில் ஒப்பற்ற தனித்திறமையுடையவர்,’ என்று மறைமலையடிகளார் பாராட்டி பெருமிதம் கொண்டார். மறைமலையடிகளார் வழியில் நின்று, தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் இருந்து உழைத்தார். இவரது ஒப்பரியதமிழறிவும், பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக ‘மொழிஞாயிறு தேவநேயபாவாணர்’ என அழைக்கப்பட்டார்.
புத்தகம் என்னும் சொல் வடமொழி சொல்லில் வந்ததாக பலர் கூறினர். ஆனால், புத்தகம் எனும் சொல், துாய தமிழ்ச் சொல் என கூறி விளக்கம் அளித்து தெளிவுப்படுத்தினார். புத்தகம்-
பொத்தகம் என்பதன் வழிவந்த சொல்லாகும். அதாவது புல்லுதல் – பொருந்துதல், புல்- பொல், பொரு- பொருந்து. பொருத்து- பொத்து- பொட்டு, பொத்துதல்- பொருந்துதல், சேர்த்தல், தைத்தல், மூட்டுதல், மூடுதல்- பொத்து – பொத்தகம் பொத்திய (சேர்த்தல்) ஏட்டு கற்றை, எழுதிய ஏட்டுத்தொகுதி என விளக்கி, இது துாய தமிழ்ச்சொல் என்று மொழிகிறார் பாவாணர்.
சொல்லாய்விற்காக அரும்பாடுபட்டவர் என்பது சிறப்புக்குரியது. மொழியாராய்ச்சி என்ற பாவாணரின் முதல் கட்டுரை இவரின் இன, மொழிப் பற்றை உலகறிய செய்தது. மதுரையில் நடந்த ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில், இவரின் தொகுப்புகள் படிக்கப்பட்டன.
தன் வாழ்வில் பல்வேறு துன்பங்கள் வந்தாலும், தான் கொண்ட லட்சியத்திலும், கொள்கையிலும் உறுதியாக இருந்தார். தமிழுக்காகவும், தன் மொழிக்காகவும் வாழ்ந்த அறிஞர்களில் மிகவும் முதன்மையானவர் இவர். ‘தமிழ் உயர்ந்தால் தான் தமிழன் உயர முடியும்,’ எனக் கூறியவர்.இவரது தமிழ் தொண்டினை பாராட்டி மதுரை தமிழ் காப்பகக் கழகம் ‘தமிழ் பெருங்காவலர்’ என்னும் விருதை பேராசிரியர் இலக்குவனார் கையில் கொடுத்து பெருமைப்படுத்தியது.
சேலம் தமிழ்ப் பேரவை ‘திராவிட மொழி ஞாயிறு’ என்ற விருது பெரியார் ஈ.வெ.ராமசாமி கையால் வழங்கப்பட்டது. அதேபோல் ‘செந்தமிழ் செல்வர்’, ‘நற்றமிழ் நாவலர்’, ‘இலக்கியச் செல்வர்’, ‘இலக்கண வித்தகர்’ என்ற பெருமைகள் இவரை சாரும். பாவாணரின் உரை வீச்சு தமிழுக்கு அமுது என்று பறைசாற்றும்.
இறுதி மூச்சு உள்ளவரை, தமிழுக்காக வாழ்ந்தார். 1981 ஜன., 15ல் சிந்திப்பதையும் மொழி ஆராய்ச்சியையும் நிறுத்தி கொண்டார். தமிழ் மொழி தன் மகன் பாவாணரை இழந்து தவித்தது. அவர் மறைந்தாலும் அவரது ஆராய்ச்சி கட்டுரைகள், பல்கலைகளிலும், கல்லுாரிகளிலும் பாடங்களாக இருப்பது அவரது தொண்டுக்கு சிறப்புடையதாகும்.