முல்லைத்தீவு கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த 8 நாட்களாக கேப்பாப்புலவு மக்களும், 5 நாட்களாக புதுக்குடியிருப்பு மக்களும் தமது காணிகளை இராணுவத்தினரிடம் இருந்து மீட்டுத் தருமாறு கோரி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சி,
முன்னரே பல காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, மக்கள் தமது காணிகள் என உரிமைகொள்ளும் காணிகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு, அதன் பின்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த போராட்டம் வலுபெறவே அங்கு சென்ற தமிழ் அரசியல் தலைவர்கள் சிலர் வாக்குறுதிகளை வழங்கி இருந்தாலும் “இந்த முறை வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றம் அடையப்போவதில்லை” என கூறி அதனை ஏற்க மக்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
அத்துடன் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாய் ஒருவர் தீர்வு கிடைக்காவிடில் தீக்குளிப்பதற்கும் தயார் என பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
அத்துடன் வடக்கு முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் குறித்த காணிகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.