கடந்த வார இறுதியில் மாத்திரம் குறைந்தது 22 அரசியல தஞ்சக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் இருந்து மனிட்டோபா ஊடாக கனடாவுக்குள் நுளைந்துள்ளதாக கனேடிய மத்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அமெரிக்காவில் இருந்து வரும் அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், கடந்த வாரம் இவ்வாறு மனிட்டோபாவினுள் வந்தடைந்த 22 பேரில் 19 பேர் அங்குள்ள சமூக மண்டபன் ஒன்றில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் இருந்து தமது பகுதிக்குள் வரும் அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து கவலை வெளியிட்டுள்ள அந்த நகர அதிகாரி ஒருவர், இதனை கையாளும் வகையில் பாதுகாப்பு ஏற்படுகளை அதிகரிக்கவோ அல்லது உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவோ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறு வந்து சேர்பவர்களால் தமக்கான செலவீனங்களும் அதிகரித்துச் செல்வதாகவும், அவ்வாறான செலவீனங்களை ஈடுசெய்யுமாறான கோரிக்கைகளை மத்திய அரசாங்கத்திடம் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அந்தப் பகுதிக்குள் அமெரிக்காவினு்ள் இருந்து நுளைவது இலகுவானதாக காணப்படுகின்றமையால், வழக்கமாகவே அங்கு இவ்வாறான அரசியல் தஞ்சக் கோரக்கையாளர்கள் வருகின்ற போதிலும், கடந்த சில மாதங்களாக அதிகரித்திருந்த இவ்வாறான வருகையானது, அமெரிக்காவின் அண்மைய அகதிகள் தடை உத்தரவுகளை அடுத்து சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் வசித்துவந்த சோமாலியா போன்ற ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கனடாவுக்குள் வருவது அதிகரித்துள்ளதாகவும், முன்னர் தனித்தனியே அல்லது இரண்டு மூன்று பேர்களாக வந்துகொண்டிருந்தவர்கள் தற்போது குழுக்களாக வர ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை கனடாவின் ஏனைய எல்லைச் சாவடிப் பகுதிகள் ஊடகா கனடாவினுள் நுளையும் அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களின் எண்ணிகையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய பொது பாதுகாப்பு அமைச்சரும் இன்று கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.