அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் டொனால்டு டிரம்ப், முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது ஒரே சீனா கொள்கைக்கு மதிப்பளித்து அதனை பின்பற்ற டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர். அப்போது ஒரே சீனா கொள்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று ஜி ஜின்பிங் அதிபர் டிரம்பிடம் வலியுறுத்தினார். டிரம்பும் அதற்கு ஒப்புக் கொண்டார்.
வர்த்தகம், முதலீடு மற்றும் சர்வதேச உறவுகள் உள்ளிட்ட விவகாரங்களில் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிப்பதாக இருநாட்டு தலைவர்களும் தெரிவித்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஒரே சீனா கொள்கையை பின்பற்ற டிரம்ப் ஒப்புதல் அளித்ததற்கு அதிபர் ஜி ஜின்பிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பதவியேற்புக்கு முன்னதாக தைவானின் அதிபரிடம் டிரம்ப் தொலைபேசியில் பேசியிருந்தார். இதனால் சீனா அதிருப்தியில் இருந்ததாக கருதப்பட்டது. முன்னாள் அதிபர் பராக் ஒபாவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
சீனாவில் இருந்து பிரிந்து தனித்து செயல்படும் தைவான் தன்னை தனி நாடு எனக் கூறி வருவதால், சீனாவுடன் உறவு வைத்துள்ள எந்த நாடுகளும் தைவானுடன் நெருங்கிய உறவு வைத்துக்கொள்வதில்லை. ஒரே சீனா கொள்கை விஷயத்தில் சீனா மிக உறுதியாக உள்ளது.