வெள்ளிக்கிழமை 10ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவுள்ள கிழக்கின் எழுக தமிழ் பேரணிக்கு பல்வேறு தரப்பினருக்கும் தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்விற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே திட்டமிட்டது போன்று காலை 9.00மணிக்கு ஆரம்பமாகும் எழுச்சிப்பேரணி நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தை சென்றடைந்ததும் அங்கு பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் நடாத்த ஏற்பாடாகியுள்ளது. அக்கூட்டத்தில் இணைத்தலைவர்கள் அரசியல்கட்சி தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உரையாற்றவுள்ளனர்.
இதில் வடக்கு முதலமைச்சரும் பேரவை இணைத்தலைவருமாகிய கெளரவ சிவி விக்னேஸ்வரன் உட்பட பேரவை அங்கத்தவர்கள் உரையாற்றுவர். தொடர்ந்து எழுகதமிழ் பிரகடனம் வாசிக்கப்படும். தமிழ் பேசும் மக்கள் அனைவரும் எதிர்கால சந்ததியினரின் உரிமைக்காக அகிம்சை வழியிலும் அறவழியிலும் போராட அணி திரளவும்.
எழுக தமிழ் நடைபெறும் தினத்தன்று வியாபார நிலையங்கள்,தனியார் நிறுவனங்கள், தனியார் கல்விச்சாலைகளை மூடி இந்த அகிம்சை போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.