ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. சசிகலா தரப்பினரால் அதை தடுத்து நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது ஓ.பன்னீர் செல்வம் அணியில் பொன்னையன், பி.எச்.பாண்டியன், முனுசாமி, மதுசூதனன் உள்பட சில மூத்த தலைவர்கள் உள்ளனர். இவர்களில் அவை தலைவர் பதவி முக்கியத்துவத்தை கருதி மதுசூதனை கட்சியில் இருந்து நீக்கி சசிகலா நடவடிக்கை எடுத்தார். மற்றவர்கள் விஷயத்தில் அவர் மவுனம் காத்து வருகிறார்.
அதுபோல ஓ. பன்னீர் செல்வத்தை ஆதரிக்கும் 6 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விஷயத்திலும் அவர் நிதானத்தை கடைபிடித்து வருகிறார். அவர்களை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினால், தனது முதல்வர் பதவி திட்டத்துக்கு இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்று எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்.
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்போது, அ.தி.மு.க. கொறடா உத்தரவிடுவார். அவர் உத்தரவை மீறுபவர்கள் எம்.எல்.ஏ. பதவியை இழக்க நேரிடும். எனவே இத்தகைய தகுதி இழப்பு மூலம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறிக்க சசிகலா தரப்பினர் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
எனவே இந்த பிரச்சினையில் இருந்து தப்பி, பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு சென்றால்தான் கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவியை பறிகொடுக்க நேரிடும். ஒரே கட்சிக்குள் பிரச்சினை நிலவுவதால் அந்த பிரச்சினையை எளிதாக சமாளித்து விடலாம் என்று சொல்கிறார்கள்.