முல்லைத்தீவு- கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கும், வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் ஆதரவு தெரிவித்து மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 22 ஆம் நாள் குறித்த போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும், கிராமிய உழைப்பாளர் சங்கமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
கேப்பாபிலவு மக்களின் வாழ்விடங்கள் எந்த நிபந்தனையுமின்றியும், தாமதமின்றியும் வழங்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் எப்போது? , காணாமல் ஆக்கப்பட்டோரின் முடிவு என்ன? , அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது? போன்ற கோள்விகளுக்கு அரசாங்கத்தின் பதில் என்ன என்பதனை வலியுறுத்தியும், மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்ற வகையில், மக்களின் நிலங்களை விட்டு சிறிலங்கா இராணுவம் வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 22 ஆம் நாள் தெற்கு மக்களையும் ஒன்றிணைத்து மாபெரும் போராட்டமாக இது முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
போர் நிறைவடைந்து 8 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும், போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படாமல், எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல், நடுத்தெருவில் விடப்பட்டவர்களாகவும், அவல வாழ்க்கைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கேப்பாப்புலவு மக்களின் ஆர்ப்பாட்டத்தின் காரணத்தையும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தினையும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவுக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும், கேப்பாப்புலவு ஆர்ப்பாட்டம் முற்றுப்பெற வேண்டும் என்றும் முன்னாள் பிரதி அமைச்சரும், சனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் 15 நாட்களாகவும் தொடரும் நிலையில், அவர்களுக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என்ற நோக்கிலும், வன்னி மாவட்டத்தில் ஏனைய தனியார் நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்திருப்பது சம்பந்தமாகவும் பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யதார்த்த நிலைமையில் கேப்பாப்புலவு மக்கள் வாழ்ந்த நிலப்பரப்புடன் இணைந்ததாக இராணுவத்தின் சிறு ஆயுதக் குதம் அமைந்திருப்பதனால், எதிர்காலத்தில் பொது மக்களின் பாதுகாப்பு கருதியே இதுவரை அந்த நிலப்பரப்பை விடுவிக்க முடியாதிருப்பதாகவும் அவர் காரணம் வெளியிட்டுள்ளார்.
எனினும் மக்களுடைய நியாயமான கோரிக்கையைப் புரிந்து கொண்டு, அதனுடன் ஒட்டி இணைந்திருக்கும் நிலப்பரப்பை அவர்களுக்காக வழங்கி, அவர்களுக்கு தேவையான வீடமைப்பையும் செய்து கொடுக்க முடியும் என்று தமது சந்திப்பின்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பூரண இணக்கம் தெரிவித்ததுள்ளதாகவும், இதனை போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு தெரிவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டதாகவும் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்குள் மக்களை நேரில் சந்தித்துப் பேசி, நிலப்பரப்பை கொடுப்பதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்று தம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் ருவன் விஜேவர்தன ஏற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவம் தனியார் காணியை தன்வசப்படுத்திக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற கருத்தை தாம் வலியுறுத்தியுளள்தாகவும், கேப்பாப்புலவு விடயத்தில் இராணுவத்தினர் நேரடியாக பொது மக்களை கட்டுப்படுத்த முனைவது இன்றைய நல்லாட்சியில் அனுமதிக்கப்படக் கூடியதொன்றல்ல என்பதனை தெளிவு படுத்தியுள்ளதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அதீத இராணுவப் பிரசன்னமானது, போரின் பின்னரான இன்றைய நல்லாட்சியின் காலகட்டத்தில் போர் இன்றும் உள்ளதான ஒரு காட்சியையே கொடுக்கின்றது எனவும், அதன் காரணமாக சாதாரண சிவில் நிலைமைகளின் கீழ் காவல்த்துறையினரின் தொகை அதிகரிக்கப்படலாம் என்ற போதிலும், இராணுவத்தின் நடமாற்றம் அதிகமாக காணப்படுவது ஏற்றுக் கொள்ளகூடிய ஒன்றல்ல என கலாநிதி குமரகுருபரன் கூறிய விடயத்தையும் ருவன் விஜேவர்தன ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.