பொறுப்புகூறல் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் ரேன்புல்லை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க நான்கு நாள் விஜயமாக அவுஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
நீண்டகால கொடூர யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் நியாயத்திற்காக காத்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அவுஸ்திரேலியாவிற்கான பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச தலையீட்டுடன் கூடிய யுத்தக் குற்றங்கள் தொடர்பான பொறுப்புகூறல் உள்ளட்டங்கலாக பல்வேறு நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகளை செயற்படுத்துவதாக 2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அரசாங்கம் உறுதி வழங்கியதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் பல்வேறு துறைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் முக்கிய விடயங்கள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாகவும் குறித்த சட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் பலர் கைதுசெய்யப்பட்டதாகவும் கண்காணிப்பகத்தின் அவுஸ்திரேலியாவிற்கான பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்கவிடம் பொறுப்புகூறல் தொடர்பில் கடுமையான கேள்விகளை பிரதமர் மெல்கம் ரேன்புல் தொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.