மன்னார், மாந்தை மனித புதைகுழி தொடர்பில், எதிர்வரும் மார்ச் மாதமளவில் உதவி செய்வதாக, வெளிநாட்டு தடயவியல் நிபுணர் குழுவினர், மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளதாக, மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று அறிவிக்கப்பட்டது. அத்துடன், இம்மனித புதைகுழி தொடர்பிலான “றேடியோ காபன்” பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் குறித்த புதைகுழியின் வயது, மரணம் மற்றும் சம்பவத்தை அளவிடுவதற்கு, குறித்த பரிசோதனை உடனடித் தேவையாக அமையாதென்றும் அக்குழுவினர் தெரிவித்துள்ளதாக, மன்றில் தெரிவிக்கப்பட்டது.
மன்னார் மனித புதைகுழி தொடர்பான வழக்கு, நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மன்றில் முன்னிலையாகியிருந்த காணாமற்போன குடும்பங்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிகள், மேற்கண்ட விடயங்களை, மன்றில் அறிவித்தனர்.
அத்துடன், இந்த புதைகுழி தொடர்பான ஆராய்ச்சிக்கு, தங்களாலான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் பரிசோதனைகளுக்குத் தேவையான நிதி வசதிகளை தாமே மேற்கொள்ளுவதாகவும், அந்த தடயவியல் நிபுணர் குழுவினர் அனுப்பிவைத்துள்ள மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, சட்டத்தரணிகள் மேலும் தெரிவித்தனர். இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை, எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், இவ்விடயம் தொடர்பான முழுமையான அறிக்கையொன்றை, அன்றைய தினத்தில் நீதிமன்றில் சமர்ப்பித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு, விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, நீதவான் உத்தரவிட்டார்