தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இதனால் தினமும் அரசியல் களம் சூடாக இருந்து வருகிறது.
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட விரிசலை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். சசிகலா ஆதரவாளர்கள் இன்னொரு அணியாக செயல்பட்டு வருகிறார்கள். சசிகலாவின் ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக பதவியேற்று உள்ளார்.
இதனால் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரண்டது போல மாணவர்கள் ஓ.பன்னீர்செல்வதற்கு ஆதரவாக மெரினாவில் திரள திட்டமிட்டிருப்பதாக வாட்ஸ்-அப்பில் பரபரப்பான தகவல் ஒன்று பரவி வருகிறது.
மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு இளைஞர்களும் பொதுமக்களும் ஒன்று கூடி ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டம் பெரும் கிளர்ச்சியாக மாறியது. அதுபோன்று மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காகவும் கூடிவிடக்கூடாது என்பதால் மெரினாவில் 144 தடை உத்தரவும் சில நாட்களுக்கு முன்பு போடப்பட்டிருந்தது. பின்னர் அது விலக்கி கொள்ளப்பட்டது. இதனை அடுத்து அங்கு இயல்பு நிலை திரும்பி வந்தது.
இந்நிலையில் மெரினாவில் மாணவர்கள் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக ஒன்று கூட முடிவு செய்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவலால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 500-க்கும் மேற்பட்ட போலீசார் மெரினா கடற்கரை முழுவதும் கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். நேப்பியர் பாலத்தில் தொடங்கி கலங்கரை விளக்கம் வரையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக மாணவர்கள் திரளப்போவதாக தமிழகம் முழுவதுமே செல்போன் மூலமாக வேகமாக தகவல் பரவி வருகிறது.
அனைத்து பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்ட மையங்களை குறிப்பிட்டு அங்கு இளைஞர்கள் திரள வேண்டும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போராட்டங்கள் நடைபெற்ற இடங்கள் அனைத்திலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோவை வ.உ.சி. மைதானம், கொடிசியா மைதானங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த 20 நாட்களாகவே வ.உ.சி. மைதானத்துக்குள் பொதுமக்கள் செல்ல முடியாதபடி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று முதல் அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மைதானத்தை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.
கோவையில் இன்று நடைபெற இருந்த தீபா பேரவை ஆர்ப்பாட்டத்திற்கும் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
இதே போல் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூரில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக வருகிற 19-ந்தேதி எம்.எல்.ஏ.க்கள் வீட்டை முற்றுகையிடப்போவதாகவும் வாட்ஸ்-அப்பில் தகவல் பரவி வருகிறது. இதையடுத்து அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.