கேப்பாப்பிலவு மக்களின் காணி உட்பட படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தி எதிர்வரும் 08 ஆம் திகதி வட-கிழக்கு முழுவதிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க தமிழ் மக்கள் பேரவை தீர்மானித்துள்ளது. கேப்பாப்பிலவு தொடர்பாக யாழ். கோண்டாவில் சேவாலங்கா மண்டபத்தில், தமிழ் மக்கள் பேரவையினர் பொது அமைப்புக்களுடன் நேற்று கலந்துரையாடினர்.
வட-கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டுள்ள காணி விடயங்கள் மற்றும் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
அந்த கலந்துரையாடலின் போது, முல்லைத்தீவு கேப்பாபிலவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் விமானப்படை மற்றும் இராணுவத்தினர் மக்களின் காணிகளை அபகரித்து வைத்திருப்பதற்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். போராட்டங்கள் தீவிரமடைந்த போதிலும், பல்வேறு தரப்பினர் கேப்பாப்பிலவு மக்களுக்காக போராட்டங்களை மேற்கொண்டு ஆதரவினையும் வழங்கி வருகின்றார்கள். அந்தவகையில், ஜனாதிபதி கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த மக்களின் காணிகள் முழுமையாக விடிவிக்கப்படாவின் வட-கிழக்கு பகுதிகளில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பது குறித்து பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடப்பட்டது.
பொது அமைப்புக்கள் அனைவரும், ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள். எனவே, வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்களின் காணிகளை சுவீகரிப்பதனை நிறுத்த வலியுறுத்தியும், கேப்பாப்பிலவு மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாவிடின் தொடர்ச்சியாக வாகனப் பேரணி மூலம் பேரணியாக போராட்டம் தொடர்வதற்கும் தீர்மானித்துள்ளார்கள். அத்துடன், ஏனைய காணிகளை விடுவிப்பதற்கும், மக்களின் ஏனைய பிரச்சினைகள் குறித்தும் அந்த இடங்களில் போராட்டம் நடாத்தப்படுமென்றும் தீர்மானித்துள்ளார்கள்.
இந்த கலந்துரையாடலில், தமிழ் மக்கள் பேரவை சார்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உட்பட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மகளீர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், போக்குவரத்துத் துறை சார்ந்தவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.