தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட சில பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்காக மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அப்பகுதிகளில் பெருமளவில் மக்கள் போராட்டம் வெடித்தது. நெடுவாசலில் மக்கள் தொடர்ந்து 15-ம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
இதையடுத்து, போராட்டக்குழுவினரின் பிரதிநிதிகள் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினர். அப்போது மக்களின் கருத்துக்களை அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை முழுமையாக கைவிடக்கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு முதல்வரை போராட்டக் குழுவினர் வலியுறுத்தினர். இதையடுத்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசின் அனுமதி இல்லையெனவும், மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டார்.இந்நிலையில், போராட்டக் குழுவினருடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அனைத்துப் பகுதிகளிலும் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் முழுமையாக கைவிடும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவில் ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
போராட்டக் குழுவினரின் இம்முடிவை அடுத்து தமிழக அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என அனைவரின் எதிர்பார்ப்புகளும் அமைந்துள்ளது.