ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் மாவீரர் நாள் நினைவு கூரல் தொடர்பாகவும், குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வரும் மார்ச் 22 ஆம் நாள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையின் முற்கூட்டிய பிரதி நேற்று வெளியிடப்பட்டது.
அதில், மாவீரர் நாள் என்ற தமிழ் உச்சரிப்பு Maaveerar Naal என ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளதுடன், அதற்கான விளக்கம், குறிப்புப் பகுதியில், Maaveerar Naal – (“Great Heroes’ Day”) என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2016 நொவம்பரில் ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக, மோதல்களில் கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பங்கள் மாவீரர் நாளை அனுசரித்தனர். இது ஒரு அதிக உணர்ச்சிபூர்வமாக விவகாரம்.
எனினும், தமது உறவுகளை இழந்தவர்கள் நினைவு கூருவதற்கான நடுநிலையான நாளாக அது இருக்கவில்லை.
மோதல்களில் கொல்லப்பட்ட அனைவரையும் நினைவு கூருகின்ற ஒரு தேசிய நாளை நிறுவனமயப்படுத்துவதன் மூலம், பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவு கூர முடியும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நம்புகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.