1983ம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரம் தொடர்பான எந்தவொரு தரவுகளும் எந்த காவல் நிலையங்களிலும் கிடையாது என்று இலங்கையின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்து மூல பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், மகிந்த ஆதரவு அணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில எழுப்பிய கேள்வியொன்றுக்கே இந்தப் பதில் நேரடியாகத தெரிவிக்கப்படாமல் சபாபீடத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
1983 ஆம் ஆண்டு யூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இடம்பெற்ற இனக்கலவரத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள், மற்றும் இடம்பெயர்ந்த சிங்கள மக்களின் எண்ணிக்கை யாதென உதய கம்மம்பில கேள்வியெழுப்பியிருந்தார்.
இக்கேள்விக்காக சபா பீடத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பதிலில், காவல்த்துறையால் மாவட்டங்களுக்கேற்ப தரவுகள் ஒன்றுதிரட்டப்படுவதில்லை எனவும், காவல்த்துறைக்குச் சொந்தமான 42 பிரிவுகளுக்குரிய காவல்த்துறை பிரிவுகள் மட்டத்திலேயே தரவுகள் ஒன்றுதிரட்டப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த பிரிவுகள் மட்டத்தில் காவல்த்துறை மா அதிபரினால் கோரப்பட்டுள்ள அறிக்கைகளின் அடிப்படையில், சில காரணங்களால் 1983 ஆம் ஆண்டு யூலை மற்றும் ஆகஸ்ட் மாத இனக்கலவரங்கள் பற்றிய தரவுகள் கிடைக்காது போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த போதிலும் மாத்தறை பிரிவில் மாத்திரம் நபர் ஒருவரின் கொலை தொடர்பான தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற சுமார் 33 ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ளமையால், ஆவணங்கள் அழிந்துள்ளமை, குறித்த தகவல் அடங்கிய ஆவணம் திணைக்களக் கட்டளையின் பிரகாரம் அழிக்கப்பட்டிருத்தல், காவல் நிலையத்திற்கு முறைப்பாடு ஏதும் கிடைக்கப்பெறாமை, சுனாமி அனர்த்தம் மற்றும் வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்கள், பயங்கரவாதத் தாக்குதல்கள், போர் சூழ்நிலையால் காவல் நிலையங்களில் ஆவணங்கள் உரிய முறையில் இற்றைப்படுத்தப்படாமை உள்ளிட்ட காரணங்களாலேயே அவ்வாறான தரவுகள் இல்லாது போயுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான காரணங்களால் காவல் நிலையங்களில் தரவுகள் இல்லாத போதிலும், மாத்தறை பிரிவில் மாத்திரம் நபர் ஒருவரின் கொலை தொடர்பான தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் அந்த பதிலில் குறிப்பிட்டுள்ளது.