கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை முப்பத்து ஒன்பதாவது நாளாக தீர்வின்றி தொடர்கிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் நாள் காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அன்றிலிருந்து இன்று 39ஆவது நாளாக எந்தவித தீர்வுகளும் முன்வைக்கப்படாத நிலையில், மழை, வெயில், பனி பாராது, இரவு பகலாக இந்த போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று 35வது நாளாகவும் தொடர்கின்றது.
கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே முல்லைத்தீவில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் இருபத்து நான்காவது நாளாக இடம்பெற்று வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொட்டகை அமைத்து இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.