வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயமே அனைத்துலக நிகழ்ச்சி நிரலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலிலும் முதன்மையானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்று 39வது நாளாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிற நிலையில், இன்றைய நாள் போராட்ட களத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறீதரன் ஆகியோர் சென்றிருந்தனர்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சுமந்திரன், காணாமல் போகச் செய்யப்பட்டோரது உறவினர்களின் மனக்குமுறல்களை தாங்கள் சரிவர புரிந்து வைத்திருப்பதாகவும், மக்களுடைய ஆவல்களும் தங்களுடைய விருப்பங்களும் வேறானவை அல்ல என்றும், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் கடுமையான அழுத்தங்களை தாங்கள் ஜெனீவாவரை நிரூபிக்கத்தக்க வகையில் வெளிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விரைவில் காணாமல் போனோர் செயலகம் தொடர்பான சட்டத்தை இல்ஙகை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் எனவும், அதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தெரிவதாகவும், அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அந்தச்செயலணியிலே ஐ.நா பிரதிநிதிகளின் தொழில்நுட்ப உதவி அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் தொழில்நுட்ப உதவி என்பன உள்ளடக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு காணாமல் போனோர் தொடர்பிலும் விசாரணைகள் இடம் பெறவேண்டும் எனவும், அதன்போது நீதி கண்டறியப்பட்டு பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இல்ஙகை அரசாங்கம் மற்றும் அரச தலைவர்கள் ஜெனீவாவில் இணை அனுசரணை பெற்றுக்கொண்ட விடயங்களை நடைமுறைப்படுத்தியே தீரவேண்டும் எனவும், ஜி.எஸ்.பி பிளஸ் போன்ற விடயங்களில் பொருளாதார ரீதியான அழுத்தங்களையும் வழங்க வேண்டும் என்று அனைத்துலகப் பொருண்மிய சமூகத்திடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசு தலைவர்கள் தென்னிலங்கையில் பேசுகின்ற விடயங்கள் தமிழ் மக்களை விசனப்படுத்தும் என்பது தங்களுக்குத் தெரியும் என்ற போதிலும், அவை அவர்களுடைய அரசியல் நிலைபேற்றுக்கான கருத்துக்களாக இருக்கும் எனவும், ஆனால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீதி வழங்காமல் இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இழுத்தடிப்புக்கள் உள்ளன எனவும், எனவே நாங்கள் அனைத்துலக ஒத்திசைவு மூலம் காரியங்களை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.