வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு ஒருபோதும் உள்ளக விசாரணைகள் மேற்கொள்ளப்படாது என்று இலங்கை அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் அனைத்துலக கண்காணிப்பாளர்களை நாட்டுக்குள் அனுமதித்தால் பாதகமான விளைவுகள் ஏற்பட்டதாகவும், இதனால் அனைத்துலக தரப்பினரைக் கொண்டு உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் தயாராக இல்லை என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் இந்த விடயங்கள் உள்ளக பொறிமுறைகளின் ஊடாக, உள்நாட்டு விசாரணைகளின் ஊடாகவே தீர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கையில் நடைமுறைபடுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும், உயிரைப் பணயம்வைத்தேனும் முன்னாள் படையினரை அணிதிரட்டி அதனைத் தடுத்து நிறுத்துவோம் என்றும் “முன்னாள் படைவீரர்கள்” ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டுக்கு எதிராக ஜெனிவாவில் சாட்சியம் வழங்கிய அனைவரையும் ஆட்சிமாற்றத்தின் பின்னர் சிறையில் போடுவோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடரில், சிறிலங்கா படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்போலியானவை எனற பிரசாரத்தினை முன்னெடுப்பதற்காக, முன்னாள் சிறிலங்கா கடற்படை அதிகாரியானரியர் அட்மிரல் சரத் வீரசேகரவை மகிந்த அணி களமிறக்கியிருந்தது.
முக்கிய ஆவணங்களுடன் ஜெனிவா சென்ற அவர், உப மாநாடுகளில் பங்கேற்று சிறிலங்கா படையினருக்குச் சார்பாகவும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் தீவிரபிரசாரத்தை முன்னெடுத்ததுடன், புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டார்.
இவ்வாறான நிலையில் 2015ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கை அரசு முழுமையாகநடைமுறைப்படுத்த வேண்டும் என்று, இலங்கை குறித்து புதிதாக நிறைவேற்றப்பட்டுள் தீர்மானத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே சரத் வீரசேகர இவ்வாறு கூறியுள்ளார்.
படையினர் குற்றமிழைக்கவில்லை என்று தாம் திட்டவட்டமாகக் கூறிவரும் நிலையில், பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கி, போர்க்குற்றம் நடந்துள்ளது என்பதற்கு அரசே முறைமுக ஒப்புதலை வழங்கியுள்ளது எனவும் அவர் சாடியு்ளார்.
ஜெனிவாவில் முகாமிட்டிருந்த விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் தன்னுடன் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும், அனந்தி, சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார், பாக்கியசோதி சரவணமுத்து, நிமல்கா பெர்ணான்டோ ஆகியோர் இலங்கைக்கு எதிராகப் பரப்புரைகளைமுன்னெடுத்ததாகவம், இது தேச விரோதச் செயலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே மீண்டும் எமது ஆட்சி வந்த பின்னர் இவ்வாறானவர்களை சிறையில் அடைப்போம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.