கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை 54 வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று சித்திரை புத்தாண்டில் கறுப்பு ஆடை அணிந்தும், கறுப்பு கொடிகளை ஏந்தியவாறும் தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
சித்திரை புத்தாண்டு பிறப்போடு தங்களுக்கு நல்தொரு செய்தி கிடைக்க வேண்டும் என்றும், அடுத்த ஆண்டிலாவது தங்களின் உறவுகளோடு புத்தாண்டு நிகழ்வை கொண்டாடுவதற்கு வழிசமைக்க வேண்டும் என்றும், இலங்கையின் சனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட, தங்களுடை அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களுக்கு நல்லதொரு தீர்வை வழங்கவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபையினர் தங்களோடு வந்து இணைந்து போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இன்று சித்திரை புத்தாண்டு பிறப்பில் அனைவரும் தங்கள் தங்கள் குடும்பங்களோடு புத்தாண்டு நிகழ்வை கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில், தாங்கள் தங்களின் உறவினர்களுக்காக வீதியில் போராடிக்கொண்டிருப்பதாகவும், இந்த நிலைமை மாறவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா ஆக்கிரமிப்பு இராணுவத்தின் முல்லைத்தீவுக்கான தலைமையகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபடும் மக்களும் இன்றைய நாளை கறுப்பு சித்திரைப் புத்தாண்டு நாளாக கடைப்பிடித்துள்ளனர்.
சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் எனப் பலதரப்பட்டவர்களும் கறுப்பு உடைகள் அணிந்து, இராணுவ தலைமையகத்தை நோக்கி தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கோசங்களை எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த அந்த இராணுவ முகாமில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சென்று சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், பண்டிகைத் திண்பண்டங்களையும் மக்களுடன் பரிமாற முயன்றுள்ளனர்.
எனினும் தாம் புத்தாண்டை கொண்டாடும் நிலையில் இல்லை என்பதனை சிறிலங்கா இராணுவத்தினருக்கு தெரிவித்த கேப்பாபுலவு மக்கள், தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் நாளுக்காக தாம் காத்திருப்பதாகவும், தமது காணிகளை விட்டு வெளியேறி தம்மை தமது சொந்த நிலத்தில் வாழ விடுமாறும் இராணுவத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.