இலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடனும், முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியுடனும் பேச்சுக்களை நடாத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இந்த சந்திப்புக்களை விரைவில் நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்பீடம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசியமைப்பை உருவாக்குவதற்காக நாடாளுமன்றம், அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டு வழிநடத்தல் குழு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வழிநடத்தல் குழுவில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்று புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஆராய்ந்து வருவதுடன், இதற்குப் புறம்பாக ஒவ்வொரு கட்சிகளுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடாத்தி புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிக்கு ஆதரவு திரட்டி வருகின்றது.
கடந்த வாரமும் மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டமைப்பு பேச்சு நடாத்தியுள்ள நிலையிலேயே தற்போது மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடனும், முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியுடனும் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரைவில் தனித்தனியே பேச்சு நடாத்தவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுடனும் கூட்டமைப்பு ஏற்கனவே பேச்சு நடத்தியுள்ள நிலையில், மீளவும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டமைப்பு பேச்சு நடத்தவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் 3 தடவைகள் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடனும் பேச்சு நடைபெற்றிருப்பதாகவும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.