சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பான கூட்டம் சாதகமான கூட்டமாக, சுமூகமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது எனவும், இராணுவத்தினரும் காணிகளை விடுவிக்கும் நோக்கதோடு செயற்படுகிறதாக தெரிகிறது என்றும், இப்படியான கலந்துரையாடல்கள் மூலம் படிப்படியாகவேனும் காணிகள் விடுவிக்கப்படும் என்று தென்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலான மாவட்ட உயர்மட்ட கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிலையில், கூட்டத்தின் நிறைவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இராணுவத்தினர் தனியார் காணிகளை விடுப்பதுதான் தங்களது முதல் நோக்கம் என்று தீர்மானித்து அறிவித்திருக்கின்றார்கள் எனவும், அரச அதிகாரிகள் தனியார் காணிகள் என்று அடையாளப்படுத்திய பல காணிகளை இராணுவத்தினர் அரச காணிகள் என்று நினைத்திருக்கின்றார்கள் என்பதே கிளிநொச்சி மாவட்டத்திலே இருக்கின்ற ஒரேயொரு பிரச்சினை என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அந்தக் காணிகளை தனியார் காணிகள் என்று உறுதிப்படுத்தினால் அவற்றையும் விடுவிப்பதான நடவடிக்கையை எடுப்பதாகவும், அரச காணிகளிலும் கூட பொது மக்களின் தேவைக்காக இருக்கின்ற பல பிரதேசங்கள் அடையப்படுத்தப்பட்டமை தொடர்பில் விண்ணம் கொடுக்கப்படுமாக இருந்தால் அதனையும் நிரற்படுத்தி முன்னுரிமை அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இராணுவத்தினர் தெரிவித்திருப்பதாகவும் சுமந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை இராணுவத்துக்கும் இடங்களை மாற்றுகின்ற போது கட்டடங்கள் அமைத்த செலவுகள் உண்டு எனவும், அரசாங்கம் அந்த செலவுகளை வழங்குகின்ற பட்சத்தில் தாங்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு செல்லலாம் என்று இராணுவத்தினர் கூறியுள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அது தவிர தங்களால் கோரப்படாத நிலையில்கூட, இரணைமடுவை சுற்றியுள்ள 2,439 ஏக்கர் நிலத்தை விடுப்பதாக இராணுவத்தினர் கூறியுள்ளதாகவும், எனினும் அது முல்லைத்தீவு மாவட்டம் என்பதால் கிளிநொச்சி கூட்டத்தில் அந்த விவகாரத்தினை எடுக்கவில்லை எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.