காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும், நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இணைந்து மேற்கொள்ளவுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது.
வடமாகாணத்தில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் நில மீட்புக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு நீதி கோரும் வகையில், தமிழ் மக்கள் பேரவையினர் இன்று திருகோணமலையில் கூடி கலந்துரையாடியுள்ளனர்.
தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் விக்னேஸ்வரன் மற்றும் வைத்தியர் லக்ஸ்மன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
கடந்த மாதத்தில் இருந்து நில மீட்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்காகவும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் எதிர்வரும் 27 ஆம் நாள் வியாழக்கிழமை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந் நிலையில் அந்த மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், தமிழ் மக்கள் பேரவையினரும் தமது ஆதரவினை தெரிவிப்பதாக தீர்மானித்துள்ளனர்.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்திற்கும், நிலமீட்பு போராட்டத்துக்கும் தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும் என்றும் தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறித்த அந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு மட்டுமின்றி, நில மீட்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது அனைத்துவித போராட்டங்களுக்கும் தமது முழு ஆதரவினையும் அளிப்பதற்கும் தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.