உலகத் தமிழினத்தின் அசைவியக்கம் ஒரே நேர்கோட்டில் நிலைகுத்தி நின்ற நாட்களை ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்வதென்பது வார்த்தைகளில் வடித்துவிட முடியாத பெருந்துயராக இருக்கின்ற போதிலும், நடந்த இனவழிப்பிற்கான நீதியைப் பெற்றேயாக வேண்டும் என்ற உத்வேகத்தினையும் முள்ளிவாய்க்கால் பெருந்துயரம் எமக்குள்ளே விதைத்துக் கொண்டிருக்கிறது என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.
ஆயிரமாயிரம் கறுப்பு யூலைகளயும், செம்மணிகளையும், செஞ்சோலைகளையும் ஒன்றாகச் சேர்த்து சிங்கள பௌத்த பேரினவாத பேயாட்சி ஆடிய ஊழிக்கூத்தின் அழியா சாட்சியாக முள்ளிவாய்க்கால் இரத்த சரித்திரம் திகழ்கின்றது எனவும் அது குறிப்பிட்டுள்ளது.
கொன்று பிணமாகவும், உயிருடனும் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட 70,000ற்கு மேற்பட்ட எமது உறவுகளுக்கு கிடைக்கும் நீதியானது, எமக்கானதாக மட்டுமன்றி, அனைத்துலக மனிதநேயத்தின் மாண்பினை காப்பதாகவும் அமையும் எனவும், ஏனென்றால் தமிழர் உடல்களுடன் அனைத்துலக மனிதநேயமும் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஆழப்புதைக்கப்பட்டுள்ளது எனவும் அது தெரிவித்துள்ளது.
ஒருவர் இருவரன்றி, 1,46,679 பேருக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியாமலே எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டது எனவும், ஒருபக்கம் எமக்கான நீதி தடுத்து தாமதப்படுத்தப்பட்டு வருகையில் மறுபக்கம் வேறு வடிவிலான இனவழிப்பு செயற்பாடுகளும் நல்லாட்சி எனப்படும் அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
ஆட்சி மாற்றம் ஒன்றே தாமதப்படுத்தப்பட்டு வரும் நீதிக்கும் தமிழர் இனப்பிரச்சினைக்கும் ஒரே தீர்வாகும் என்ற மைய்யப்புள்ளியில், இனவழிப்பிற்கு இணை அநுசரணை வழங்கிய அத்தனை நாடுகளும் ஒன்றிணைந்து மகிந்த ராசபக்சே ஆட்சியை தோற்கடித்து மைத்திரி-ரணில் தலைமையிலான இந்தப் புதிய அரசை அரியணையில் ஏற்றினார்கள்.
தமிழ்மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஆட்சி மாற்றம் என்ற வாக்குறுதியின் அடிபடையில், தமிழ் மக்களின் வாக்குப்பலத்தில் அமைக்கப்பட்ட இந்த அரசின் கடந்த 28 மாத ஆட்சிக்காலத்தின் அதிமுக்கிய செயற்பாடாக இருந்துவருவது இனப்படுகொலைக் குற்றவாளிகளை அனைத்துலக மாமன்றத்தில் இருந்து காபந்து செய்வதே எனவும், இனப்படுகொலைக்கும், ஆட்சிமாற்றத்திற்கும் இணை அநுசரணை வழங்கிய அத்தனை நாடுகளும் இனப்படுகொலைக் குற்றவாளிகளை பிணையெடுக்கவும் இணை அநுசரனை வழங்கி நிற்பது பெருந்துரோகமாகும் எனவும் அது குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தப்பின்னணியில் தமிழர் தாயகமெங்கும் மக்கள் போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து வரும் நிலையில், அதனை இல்ஙகை அரசோ, நல்லாட்சி அரசிற்கு வக்காளத்து வாங்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போ இதுவரை கண்டுகொள்ளாதிருக்கின்றமையை வன்மைமையாகக் கண்டிப்பதாகவும் ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.
தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவும், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடங்காத மண்ணாசையின் வெளிப்பாடாகவும் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய மானுடப் படுகொலையானது, சுதந்திர தமிழீழமாக தமிழர்கள் மீள்வது ஒன்றே இறுதியானதும் உறுதியானதுமான தீர்வென்பதை இடித்துரைக்கின்றது என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே முள்ளிவாய்க்கால் பெருந்துயரத்தை நெஞ்சிலேந்தி, நீதிக்கான நெடும்பயணத்தில் உறுதியோடு துணைவருமாறு அனைத்து மக்களையும் இத்தருணத்தில் அன்போடு கேட்டுக்கொள்வதாகவும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அழைப்பு விடுத்துள்ளது.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கூறியதைப் போன்று, சிங்கள தேசத்திலே கடந்த 69 ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப்போவதில்லை எனவும், அவ்வாறு நிகழுமென எதிர்பார்த்தால், அது அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறொன்றுமில்லை எனவும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை மேலும் தெரிவித்துள்ளது.