சுயநிர்ணய அடிப்படையில் தமிழர் தாயகத்தை நாமே ஆளக்கூடிய தீர்வை வென்றெடுப்பதே கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்கும், மாவீரர்களுக்கும் நாம் செலுத்தும் உண்மையான மரியாதை என்று வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று நடைபெற்ற இனப்படுகொலை நினைவுதினத்தின் பிரதான நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
1948ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இனப்படுகொலை 1990களில் விஷ்வரூபம் எடுத்தது எனவும், அதன் எதிரொலியாக 2009ஆம் ஆண்டு ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நின்றுவிடாது எமது இனத்தின் மீதான படுகொலை தொடர்ந்தும் நீடித்து வருகிறது எனவும், இந்த நிலையில் இறுதி போரில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கும், போர்க்குற்றங்களுக்கும் தமிழினம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் நீதி கோரி நிற்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுளளார்.
அனைத்துலகத்தின் மூலம் மாத்திரமே எமக்கு தீர்வு கிட்டும் எனவும், இனியும் எமது தமிழ் தலைவர்கள் ஏமாறக்கூடாது என்றும், அரசாங்கத்தின் அரைகுறை அரசியல் தீர்வுகளை தமிழ் தலைவர்கள் நிராகரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடி, சுயநிர்ணய அடிப்படையில் தமிழர் தாயகத்தை நாமே ஆளக்கூடிய தீர்வை வென்றெடுப்பதே கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்கும், மாவீரர்களுக்கும் நாம் செலுத்தும் உண்மையான வணக்கமாக அமையும் என்பதையும் அவர் சுட்டிக்காடடியுள்ளார்.
மக்களின் உணர்வுகளையும், விடுதலை உணர்வையும் ஒருபோதும் மழுங்கடிக்க முடியாது எனவும், எம்மை நாமே ஆளக்கூடிய ஒரு தீர்வை வென்றெடுக்கும்வரை எமது போராட்டங்கள் தொடரும் என்றும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.