இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென அனைத்துலக மன்னிப்புச் சபை கோரியுள்ளது.
போர் நிறைவடைந்து எட்டாண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு அனைத்துலக மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக தர நிர்ணயங்களை பின்பற்றக்கூடிய வகையிலேயே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என்பதனையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமை மீறல்களுக்கு துணை நிற்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், இரண்டு ஆண்டுகள் ஆட்சி நடாத்தி வரும் தற்போதயை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கம் செய்ய இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அது குற்றம் சுமத்தியுள்ளது.
உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் காவல்துறையினருக்கு மித மிஞ்சிய அதிகாரங்களை வழங்கும் வகையிலும், சந்தேக நபர்களின் உரிமைகள் ஒடுக்கப்படக் கூடிய வகையிலும் அமைந்துள்ளதாகவும், இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறா நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருவதாகவும் அது குற்றஞ்சாட்டியுள்ளது.
போர் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் அவர்களுக்கு, அஞ்சலி செலுத்துவோர் ஒடுக்கப்படுவதும் அடக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல எனவும் அனைத்துலக மன்னிப்புச் சபையின் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.