பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்க முடியாத கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அண்மையில் யாழ். வந்த பிரதமரைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று சொந்தம் கொண்டாடியிருப்பது கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், கூட்டமைப்பினர் பொய்களைக் கூறி, எமது மக்களுக்குத் தேர்தல் காலங்களில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, அவர்களை நம்ப வைத்த காரணத்தால்தான், இன்று மக்கள் நடுத்தெருவில் நின்று நீதி கோரி போராடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடக்கில் வேலையற்ற பட்டதாரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் எனவும், கிழக்கிலும் வேலையற்ற பட்டதாரிகள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதையும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா இராணுவம், அந்தக் காணிகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில், காணிகளின் சொந்தக்காரர்கள் இடம்பெயர்ந்து தற்காலிக குடிசைகளிலும், நலன்புரி முகாம்களிலும் வாழ்ந்து வரும் நிலையில், அந்த மக்களும் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கு மேலாகப் போராடி வருகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அது மாத்திரமல்லாமல் தமிழ் பேசும் மக்களாகிய முஸ்லிம் மக்கள் இனவாதிகளால் தாக்குதலுக்குள்ளாகி வருகிறார்கள் எனவும், இவ்வாறான சூழலில் தான் சுமந்திரன் பிரதமரைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் எனவும், முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் எமது மக்கள் முகம் கொடுத்து வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுத் தருவதாக கூறித்தான் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தலைமையிலான கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு நிபந்தனையில்லாத ஆதரவை வழங்கினார்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.
இவ்வாறான ஆதரவு மூலம் தமிழ் மக்கள் முகம் கொடுத்து வரும் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று அவர்கள் அப்போது தெரிவித்திருந்தனர் எனவும், கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 06ஆம் நாள் நல்லூர் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பகிரங்க விவாதமொன்றில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் எனவும், அதற்கான வாக்குறுதி தங்களுக்குக் கிடைத்திருப்பதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இன்றுவரை தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை எனவும், எமது மக்களுக்கான பொறுப்புக்கூறலிலிருந்து கூட்டமைப்பினர் தப்பித்துவிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கூட்டமைப்பினரின் ஏமாற்று வேலைகளுக்கு இனியும் எமது மக்கள் துணைபோக மாட்டார்கள் என்பது தங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.