மன்செஸ்ட்டர் நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அடுத்து பிரித்தானியா அதன் பயங்கரவாத மிரட்டல் எதிர்ப்பு நிலையை மிக உச்சமான நிலைக்கு அதிகரித்துள்ளது.
இவ்வாறு பிரித்தானியா அறிவித்துள்ளமையானது மற்றொரு தாக்குதல் சம்பவம் எந்த நேரமும் நடக்கலாம் என்பதைக் குறிப்பிடுவதாக கூறப்படுகிறது.
அத்துடன் பொது நிகழ்ச்சிகளில் இனிமேல் இராணுவப் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் என்று பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே கூறியுள்ளார்.
மென்செஸ்ட்டர் நகரில் நடந்த கொடூரமான தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து இதனைத் தெரிவித்துள்ள அவர், விளையாட்டு அரங்குகளிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் நேற்றுத் திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதுடன், 59பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
விசாரணைகளை மேற்கொண்டு வந்த அதிகாரிகள் நேற்றைய தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளனர்.
லிபியாவில் இருந்து சிறுவயதில் அகதியாக பிரித்தானியா சென்ற 22 வயதான சல்மான் அபேதி என்பவர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர் மான்செஸ்டர் நகரின் பல்வேறு முகவரிகளில் வசித்து வந்துள்ளார் எனவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதே தகவல்களை அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
இந்த தாக்குதலில் இவர் தனித்து செயல்பட்டாரா? அல்லது வேறு குழுக்கள் சம்பந்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து காவல்த்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை மான்செஸ்டர் தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்று டெலகிராம் செயலி வழியாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் அறிவித்துள்ள போதிலும்,அது தொடர்பில் பிரித்தானியாக் காவல்த்துறைத் தரப்பில் இருந்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
இதேவேளை நேற்றைய இந்த தககுதல் சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் தங்களின் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானிய மகா ராணியாரும் நேற்றைய இந்த தாக்குதலை காட்டுமிராண்டித்தனமானது என்று தெரிவித்துள்ளார்.