ஈழத்தமிழ் மக்கள் கோரி நிற்பது நீதியுடன் கூடிய அரசியல் தீர்வே எனவும், அதனை அடைவதற்கு வலுவான அரசியல் கட்டமைப்பினைத் தமிழ் மக்கள் உருவாக்கித் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பேராசிரியர் இராமு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
நோர்வேயில் கடந்த மே மாதம் 28ஆம் நாள் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட பேராசிரியர் இராமு மணிவண்ணன், நிகழ்வின் ஒரு அங்கமாக சிறப்புரையாற்றிபோதே இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழகத்தின் அரசியல் சூழலும், அதன் வெளிப்பாடுகளும் ஈழத்தமிழ் அரசியலின் சமகாலமும் பற்றிய விடயங்கள் சார்ந்த தனது அவதானிப்புகளைப் பற்றிய கருத்துகளையும் தனதுரையின் போது தெரிவித்துள்ள அவர், தமிழக அரசியல் கட்சிகள் தத்தமது அரசியலாலும் சித்தாந்தங்களாலும் வேறுபட்டு நின்றாலும், தமிழக மக்கள் உணர்வு ரீதியாக தமிழீழ மக்களின் உரிமைகளுக்கு ஆதரவாக நின்றனர் என்று கூறியுள்ளார்.
என்றைக்குத் தமிழகம் ஒரு சரியான உறுதியான அரசியலை உருவாக்குகின்றதோ, அன்றைக்குத்தான் தமிழீழத்திற்கான ஒரு பொருத்தமான அரசியல் பங்களிப்பை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் சமகால அரசியலில் ஒரு திடீர் தலைமைத்துவ இடைவெளி ஏற்பட்டுள்ளதுடன், புதிய கட்சிகள் தலைதூக்க முடியாத சூட்சும நிலையும் நிலவுவதாகவும், இதன் விளைவாக மிகப்பெரும் அரசியல் தடுமாற்றத்திலும் நிலைகுலைவிலும் தான் தமிழகம் இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
60 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் சமூக வரலாற்றை கொண்ட திராவிட இயக்கங்கள், இறுதி இருபது ஆண்டுகளில் சிந்தாந்த ரீதியாகவும் செல்நெறி ரீதியாகவும் இறங்குமுகத்தையே சந்தித்து வந்துள்ளன எனவும், தமிழக அரசியல் சித்தாந்த வீழ்ச்சியும் தலைமைகளின் தவறுகளும், அரசியல் வீழ்ச்சிகளுமே இதற்கான காரணங்கள் எனவும் அவர் விபரித்துள்ளார்.
இவற்றினால் தான் ஈழச்சிக்கலில், குறிப்பாக 2009 காலப்பகுதியில் மத்திய அரசின் மீதோ, அதன் வெளியுறவு அரசியல் மீதோ தாக்கத்தினையோ செல்வாக்கினையோ ஏற்படுத்த முடியவில்லை எனவும், உணர்வுபூர்வமான மக்கள் எழுச்சியைத் தாண்டி அரசியல் மாற்றங்களாக எதனையும் நகர்த்த முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2009இல் நிகழ்ந்த ஒரு பெரும் ஏமாற்றத்தின், துயரத்தின் விளைவுகளே ஜல்லிக்கட்டின் ஊற்று என்பதே உண்மை எனவும், அதுவே மாற்று அரசியலுக்கான ஒரு பாதையைத் தமிழகம் தேடிக்கொண்டிருப்பதன் வெளிப்பாடாகவும் இதனைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலானவற்றில் வலதுசாரி சார்ந்த ஒரு அரசியலில் போக்கு அதிகரித்து வருவதாகவும், வலதுசாரிச் சிந்தனை கொண்ட கட்சிகள் பெரும்பாலான நாடுகளில் ஆட்சியமைத்து வருவதாகவும், அதன் விளைவாக தேசிய இன உரிமைகளை புறமொதுக்கும் போக்கும் அதிகரித்து வருகின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதி விசாரணைகள், அதற்கான தீர்ப்புகள், அரசியல் உரிமைசார் தீர்வுகள் சார்ந்த இவ்வாறான பொறிமுறைகள் ஒருவகையில் கால இழுத்தடிப்புக்குரிய துருப்புச்சீட்டுகளாகவே கைக்கொள்ளப்படுகின்றன என்ற போதிலும், இவற்றுக்கு எதிரான உரிமைசார் அரசியல் முன்னெடுப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் எனவும், அவற்றை இராஜதந்திர ரீதியிலும் சாதுரியமான முறையிலும் பயன்படுத்துவதில் தான் எமது முன்னெடுப்புகளின் வெற்றி தங்கியுள்ளது எனவும் அவர் விளக்கியுள்ளார்.
ஈழத்தமிழ் மக்கள் கோரிநிற்பது நீதியுடன் கூடிய அரசியல் தீர்வே எனவும், அதனை அடைவதற்கு வலுவான அரசியல் கட்டமைப்பினைத் தமிழ் மக்கள் உருவாக்கித் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் எனவும், அத்தோடு அனைத்துலக சக்திகளிடம் எமது அரசியலைச் சரியான முறையில் முன்னெடுப்பதற்கும் அவ்வாறான உறுதியான அரசியல் கட்டமைப்பும் திட்டங்களும் அவசியப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.