கரும்புலி ஒன்றின் தந்தையுடன்….
————————————–
அந்த முகங்கள்…சாவுக்கே நாள்குறித்துவிட்டும் சிரித்தபடி திரிந்த புன்னகைமுகங்கள்..
அப்படியான ஒரு கரும்புலியின் பெற்றோருடன் கதைக்க ஒரு முறை கரும்புலிநாள் கழிந்து போயிருந்தேன் இங்கு.
ஆணையிறவுக்குள் உள்நுழைய தமிழீழவிடுதலைப்புலிகள் ஆயிரமாயிரமாய் மரபுவழி போர்புரிந்து கொண்டிருந்த பொழுதில் இயக்கச்சியில் இருந்து சிங்களபடை வீசிய எறிகணைமழை போரின் முடிவுகளை மாற்றிடுமோ என்று நினைத்திருந்த வேளையிலே..
கரும்புலி மேஜர் செழியனின் தலைமையில் ஒரு அணி இயக்கச்சிஎறிகணை முகாமை குறிவைத்து நடக்கிறது.
ஆணையிறவை சூழநன்றிருந்த தமிழீழவிடுதலைப்புலிகளை குறிவைத்து எறிகணைவீசியசிங்களபடைமுகாமை குறிவைத்த தாக்குதலை மேஜர் செழியன் ஆரம்பித்து ஒருபகலும் ஒருஇரவுமாக தாக்குதலை தொடர்ந்துநடாத்தி இயக்கச்சிஎறிகணைமையத்தை துடைத்து எறிந்து அருகில் இருந்த ஆயதகளஞ்சியத்தை எரியவைத்து
இறுதியில் கரும்புலி மேஜர் செழியனும் அதிலே காற்றுடன் கலந்துபோகிறான்…
நானிருக்கும் இடத்துக்கு அருகிலேயே இப்போது செழியனின் அப்பா அம்மா…
அடிக்கடி நான் சந்திப்பவர்கள்தான்..அதிலும் செழியனின் அப்பா…தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் ஆரம்பகாலமனிதர்.!.
தேசியதலைவர் தனது வரலாற்றை ஒலி-ஒளி வடிவில்கூறிடும் விடுதலைத்தீப்பொறி ல் செழியனின் அப்பாவும் தானும் சேர்ந்து முதன்முதலில் செய்தவற்றை தலைவர் கூறுவதிலேயே அவர்பெயரும் இருக்கிறது…மற்றும்படி,விடுதலைப்போராட்டம் ஓரளவுக்கு முன்னகர்ந்த 1980களின் ஆரம்பத்தில் பணநெருக்கடிகள் ஏற்படும்போதெல்லாம் நாம் ஓடிப்போய் தட்டும் ஒரே கதவு அவரது வீடுதான்…
82ல் சாவகச்சேரி சிங்களகாவல்நிலைய தகர்ப்பில் காயமடைந்த சீலன்,புலேந்திரன் ஆட்களுக்கு மருத்துவம் செய்யவும், மருந்துகளுக்கும் அவசரமாக பணம் தேவைப்பட்டபோது எத்தனைபேரிடம் ஓடியும் கைவிரித்த நிலையில் செழியனின் அப்பாவிடமே இறுதியில் அது கிடைத்தது..
இப்படி எழுதமுடிகின்றதும்,எழுதமுடியாததுமான ஏராளம் உதவிகள்..கைகொடுப்புகள்..உயிரை துச்சமென மதித்த பெரும் உதவிகள்..
அப்படி ஏற்கனவே தெரிந்த ஒருவரே கரும்புலி செழியனின் அப்பா என்பதால் எமக்கிடையே அறிமுகம் எதுவும் தேவை இல்லாமலே கதைக்க முடிந்தது…
கரும்புலிநாளை பற்றி கதைத்தபோது அவர் தனது பிள்ளைக்காக தந்தை என்ற முறையில் இழப்பு இருந்தாலும் ‘ இந்த பிள்ளைகள் எல்லாரினதும் தியாகத்துக்கு ஒரு பலன் கிடைக்காமலேயே போய்விடுமோ’ என்ற ஆதங்கமும் இருந்தது..
ஆனாலும் ‘ ஏதோ ஒருநாள் இந்த அர்ப்பணங்கள்,தியாகங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு பெரும் பலன் இந்த இனத்துக்கு விடுதலை என்ற பெயரில் கிடைத்தே தீரும் ‘ என்பதில் அவர் உறுதியும் தெரிந்தது.இத்தனைக்கும் கரும்புலி மேஜர் செழியனின் அப்பாவின் சகோதரர்கூட ஒரு மாவீரர்தான்.தமிழீழத்தின் திசைவழியை மாற்றிய ஒரு பெருந்தியாக சம்பவத்தில் அவரும் 80களின் இறுதியில் மாவீரராகினார்.
ஒரு தாயகவிடுதலைக்கு ஒரு குடும்பம் எவ்வளவு செய்யமுடியுமோ அதனைவிடவும் அதிகமாக செய்து முடித்தபின்னரும் செழியனின் அப்பாவுக்கு கவலையெல்லாமே தனது மகன்மட்டுமல்ல அவனைப்போன்ற எண்ணற்ற மாவீரர்களின்,கரும்புலிகளின் முயற்சிகளும்,வலியும்,தியாகமும் ஒருபோதும் தோற்றுப்போய்விடக்கூடாது என்பதுதான்.
இதைப்போலவே அனைத்து மாவீரர்களின் உறவுகளுக்குள்ளும் தங்களது செல்வங்களது தியாகங்களும்,இந்த போராட்டத்தில் தங்கள் செல்வங்கள் பட்ட வலிகள்,பாடுகள் எல்லாமே வீணாகி போய்விடுமோ என்ற ஆதங்கம் இப்போது எழுவது இயற்கைதான்…
என்ன சொல்லப்போகின்றோம் இவர்களுக்கு..ராஜதந்திரமேசையில் எல்லாம் சுமுகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது..பொறுத்திருங்கள்…என்று சொல்லப்போகின்றோமா..? இல்லை,
உங்கள் பிள்ளைகள் அதிகமாக கனவுகண்டு போராடி விட்டார்கள்..அவர்களுக்கு அரசியல்அறிவும்,பூகோளஞானமும் இல்லை அதனாலேயே எல்லாம் போனது.. இனிமேல்,பூகோளஞானமும், அடிபணிவு அரசியலும் கொண்டு நாம் தமிழர்களின் உரிமையை வேண்டி பொறுவோம் என்று சொல்லப்போகின்றோமா..?இல்லை..
விடுதலைக்கான ஏதாவது ஒரு செயலைதன்னும் ஒவ்வொருவரும் செய்வோம் என்று உறுதிஅளிக்க போகின்றோமா..?
கரும்புலி மேஜர் செழியனை போன்று எத்தனை எத்தனை இளைய இனியஉயிர்கள் தமது இளைமைகனவுகளை துறந்து தாயகமீட்புக்கான போரில் ஆகுதி ஆகியிருக்கிறார்கள்.
அவர்களிலும் கரும்புலிகள் தமது சாவின் நாள் தெரிந்தும் இலட்சியதாகத்தை நெஞ்சில்ஏந்தி இலக்கை நெருங்கி விடுதலைக்கான மிகப்பெரும் செயல் ஒன்றை முடித்துவிட்டு காற்றில் கலந்துஇருக்கிறார்கள்…
என்ன செய்யப்போகின்றோம் இவர்களது இலட்சியம் வெற்றியடைவதற்காக..?
கரும்புலிகள் ஒவ்வொருவரும் தமது இறுதி இலக்கினை நோக்கிய பயணத்துக்கு புறப்படும் முன்னர் எழுதும் கடிதங்களில் தலைவர் பத்திரம்,தலைவர் பத்திரம்,அண்ணையை பலப்படுத்துங்கோ என்று வேண்டி எழுதுவது வெறுமனே ஒரு தனிமனிதனின் மேலான அன்பினால் மட்டும் அல்ல இலட்சியம் வெல்லப்படவேண்டுமானால் ஒரு அமைப்பு,அதற்கான ஒரு படையணி,அதற்கான ஒரு அரசியல் நோக்கு,அதனை நடாத்திடும் நேர்மையும் உண்மையும் வீரமும் நிறைந்த தலைமை இவ்வளவும் முக்கியம் என்பதை அறிந்தே அவர்கள் எழுதினார்கள்..இவையளைத்தினது; மொத்த குறியீடாக தேசியதலைவர் என்ற பெரும்சக்தியே நிற்பதாலேயே அதனை பெலப்படுத்தும்படியும்,அதனை பாதுகாக்கும்படியும் தமது இறுதிநேரத்திலும் கேட்டு சென்றார்கள்..
அவர்கள் இறுதி நேரத்திலும் வேண்டுகோள்விடுத்து சென்ற அந்த போராட்டசக்தியை பலப்படுத்தும் ஆன்ம வலு நம் எல்லோருள்ளும் இருக்கிறது..
சோர்வு களைந்து,விரக்தி போக்கி,உறுதி நேக்கி நாமனைவரும் எழுந்து விட்டோம் என்பதே அவர்களுக்கான நன்றியறிப்பு.
எங்கள் ஒழுங்கைகளில்,வீதிகளில் நடந்து திரிந்த இந்த இளையமனிதர்கள் எமக்கான விடுதலைக்காக உடல்சிதறி போய்விட்டார்கள்..
இவர்களுக்கான எம் கடமையை நாம் எப்போது செய்யப்போகின்றோம்…
கரும்புலி மேஜர் செழியன் எழுதிய இறுதிக்கடிதத்திலும்கூட அதன் இறுதி பந்தியில்
“”‘….அது போல் எமது போராளிகள் சிந்தும் இரத்தத்தில் தன்னும் தமிழருக்கு ஒரு நாடு கிடைக்க வேண்டும் அதை நிறைவேற்ற வேண்டுமாயின் மக்களாகிய நீங்கள் எமது போராட்டத்தின் பால் அணி திரள வேண்டும். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ”
இவ்வண்ணம்,
போராளி
செழியன்
என்றே எழுதி இருக்கின்றான்.
செழியன் ஒரு உதாரணம் மட்டுமே.இவனைப் போல எத்தனை எத்தனை இன்னுயிர்கள்…
இவர்களின் நினைவுதினம் என்பது வெறுமனே யூலை 5ம்திகதி மாத்திரம் அல்ல.எந்த நாளும்தான்.
எந்நாளும் அவர்களின் நினைவை ஒருகணம் தன்னும் மனதில் இருத்தினால் பெரும் உறுதி பிறக்கும்.
விடுதலைக்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற ஓர்மம் வெளிக்கும்..
அந்த உணர்வுகளே எந்நாளும் விடுதலையை நோக்கி எம் இனத்தை முன் நகர்த்தும் பெரும் சக்தி..
தமிழர்களின் போர்ஆயுதம் மட்டுமல்ல கரும்புலிகள்.
தமிழர்களின் ராஜதந்திர மொழியும் கரும்புலிகளாகவே இருந்தார்கள்..
எதிரி நடாத்திய போர் முனைப்புகளை மட்டுமல்லாமல் எதிரி குள்ளநரித்தனத்துடன் முன்னெடுத்த ராஜதந்திர செக்மேற்றுகளை உடைத்து எறிவதிலும் கரும்புலிகளே முன்னின்றார்கள்..
ஒரு இனம் தனது விடுதலைக்காக எவ்வளவு உச்ச தியாகம் செய்ய முடிந்ததோ அத்தனையும் செய்யப்பட்டிருக்கிறது எம் இனத்தில்.அதன் அடையாளங்களாக கரும்புலிகள்..
அவர்கள் செய்துமுடித்த தியாகத்தின் கோடியில் ஒரு பங்கைதன்னும் நாம்மால் செய்து முடிப்போமானால் அதுவே அவர்களுக்கான உண்மையான வீரவணக்கமாகும்..
– ச.ச.முத்து-