மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போராட்டங்களின் காரணமாகவே படையினர் வசமுள்ள மக்களின் காணிகள் தொடர்ச்சியாக விடுவிக்கப்பட்டு வருவதாகவும், அதன் ஓர் அங்கமாகவே மயிலிட்டியில் மக்களின் ஒரு தொகுதி காணி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
மன்னார் நகர சபையின் புதிய அலுவலகக்கட்டிடம் இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்ட நிலையில், அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
படையினர் வசமுள்ள மக்களின் காணிகள் சில படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன என்றால், அதற்கு மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போராட்டங்களே காரணம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எங்களுடைய ஒட்டு மொத்த அழுத்தங்களையும் ஒற்றுமையாக மத்திய அரசிற்கு கொடுக்க வேண்டிய முக்கிய தருணத்தில் தமிழர் தரப்பு உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில் எதிர் மறையாக எங்களுடைய மாகாண சபை உறுப்பினர்கள் சிலரும், அமைச்சர்களும், எங்களுடைய முதலமைச்சரை தூக்கி வீச வேண்டும் என்பதற்காக, மத்திய அரசாங்கத்தில் உள்ள உறுப்பினர்களுடன் இணைந்து, வடமாகாண மக்களினால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சரை தூக்கி எறிகின்ற நிலைக்கு வரும் அளவிற்கு கூட்டமைப்பின் தலைமை இருக்கின்றது எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
மக்களினால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபையை மத்திய அரசின் காலில் வீழ்ந்து கலைக்கின்ற நிலையும் ஏற்பட்டது எனவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.