நல்லிணக்கம் என்பதெல்லாம் அரசியல் முகமே தவிர இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது நல்லாட்சியில் இடம்பெறப் போவதில்லை என தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையின் மனித உரிமை நிலைவரத்தை அம்பலப்படுத்திய ஐ.நா. அறிக்கையாளர் மீது இனவாத மற்றும் அடக்குமுறைச் சிந்தனை அடிப்படையிலேயே நீதி அமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ கோபத்தை வெளிக்காட்டியுள்ளார்.
யுத்தக் குற்றம் இடம்பெறவில்லை இராணுவத்தை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்த மாட்டோம் என நீதி அமைச்சர் கூறி இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை மறுக்கும் செயல் மட்டுமல்ல உண்மையை ஏற்றுக் கொள்ள நல்லாட்சி ஆயத்தமில்லை என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது.
மேலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களிடம், வன்முறையை பாவித்து குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் பெறப்படவில்லை என்பதையும், அவ்வாறு பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்கு தொடரப்படவில்லை என்பதையும் நீதி அமைச்சர் நிரூபிப்பாரா?” என அருட்தந்தை மா. சக்திவேல் மேலும் தெரிவித்துள்ளார்.