அறிமுக இயக்குநர் பிருதிவி ஆதித்யா இயக்கத்தில் நடிகர் சரத்குமார் தனது 2-வது ஆட்டத்தை துவக்கியிருக்கிறார்.
பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் பி.கார்த்திகேயன் தயாரிக்கும் படம் ‘2-வது ஆட்டம்’. இதில் புதிய இயக்குனர் பிருதிவி ஆதித்யா அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். அவருடன் லட்சுமி பிரியா, மைம் கோபி, நந்தினி ராய், சுரேஷ் மேனன், சேதன், நடிக்கிறார்கள். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இசை – கே எஸ் சுந்தரமூர்த்தி, படத்தொகுப்பு – பிரவீன் ஆன்டனி, கலை – வைர பாலன். படம் பற்றி கூறிய இயக்குனர்…“எங்களுடைய இளம் படகுழுவினரின் உற்சாகத்துக்கு அளவே இல்லை என்றுதான் கூற வேண்டும். சரத் சார் போன்ற ஒரு ஜாம்பவானுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு கிடைத்த பாக்கியம். இன்றைய சினிமாவை பற்றிய அவரது புரிதல் போற்றக் கூடியது. அவரது திறமைக்கு சவால் விடும் அளவுக்கு காட்சி அமைப்புகள் இருக்க வேண்டும் என நாங்கள் உழைக்கிறோம். பூஜையுடன் எங்கள் பணிகளை தொடங்கி இருக்கிறோம்” என்றார்.