கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா பணியிடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக பா.ஜ.க.வினர் இன்று (செவ்வாய்க்கிழமை) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களுர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவின் அறையில் தனியாக சமையல் கூடம் அமைத்துக் கொள்ள விதிகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டதாக, சிறைத்துறை டிஐஜி ரூபா கூறிய முறைப்பாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்காக சிறைத்துறை இயக்குனர் சத்தியநாராயண ராவ் மற்றும் சில அதிகாரிகள் சசிகலாவிடம் இருந்து 2 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றதாகவும் ரூபா குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து, சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபாவை பணியிட மாற்றம் செய்த கர்நாடக அரசு, சிறைத்துறை இயக்குநர் சத்தியநாராயண ராவை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது.
இந்நிலையில், டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கர்நாடக பா.ஜ.க. எம்.பி.க்கள், நேர்மையான அதிகாரிகளை காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிடும் வகையிலான பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.