புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார் என்பவரை தப்பிக்க உதவினார் என்று குற்றம்சாட்டப்படும், சிறிலங்கா காவல்துறையின் உதவி ஆய்வாளர் சிறீகஜன் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த வழக்கில் உதவி ஆய்வாளர் சிறீகஜனைக் கைது செய்வதற்கு தாம் நடவடிக்கை எடுத்த போது, அவர் தலைமறைவாகி விட்டதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.
அத்துடன், அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்குமாறும் ஊர்காவற்றுறை நீதிவானிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, உதவி ஆய்வாளர் சிறீகஜனை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று குடிவரவு குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, உதவி ஆய்வாளர் சிறீகஜன் சில நாட்களுக்கு முன்னதாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.
அதையடுத்தே அவர் தலைமறைவாகியிருப்பதாக கூறப்படுகிறது.